குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வவுனியாவில் பாடசாலை மாணவன் ஒருவன் மீது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி , நடத்துனர் மற்றுமொரு நபர் ஆகியோர் இணைந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். வவுனியா பூவரசன் குளம் ஊடாக சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதி நடத்துனர் ஆகியோரே தாக்குதல் நடத்தி உள்ளனர்.
அது தொடர்பில் மேலும் தெரிய வருவதவாது ,
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் வீதியில் போட்டி போட்டு மிக வேகமாக பயணித்த வேளை வீதியால் மாணவிகளுடன் வந்த மாணவன் ‘என்ன என்று ஓடுறாய் ?’ என சாரதியிடம் கேட்ட போது சாரதி மாணவனுக்கு திரும்ப பேசியுள்ளார். மாணவனும் பதிலுக்கு பேச வாய் தர்க்கம் முற்றியதை அடுத்து சாரதி , நடத்துனர் மற்றுமொரு நபர் ஆகியோர் இணைந்து மாணவன் மீது தடி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.
அதனை அடுத்து அவ்விடத்தில் நின்றவர்கள் மற்றும் பேருந்தில் இருந்தவர்கள் மாணவனை தாக்குதலில் இருந்து காப்பாற்றியுள்ளனர். அதேவேளை தாக்குதல் நடத்திய பேருந்து சாரதி நடத்துனர் ஆகியோர் மது போதையில் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.
அதேவேளை பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் குறித்த மாணவர் திருடினார் என குற்றம் சாட்டுகின்றார்கள் எனவும், ஆனால் மாணவன் திருடவில்லை எனவும் சாரதிக்கு பேசியதால் தான் மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பேருந்தில் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.