குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த 1977 ஆம் ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் காவல்துறையினருக்கு ஒருவாரம் விடுமுறை வழங்கிய ஐக்கிய தேசியக்கட்சி தற்போது எப்.சி.ஐ. என்ற பெயரில் காவல்துறை பிரிவை ஏற்படுத்தி அரசியல் எதிரிகளை வேட்டையாடி வருகிறது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமான அரசியல் பழிவாங்கல்கள் இன்னும் முடியவில்லை. அரசாங்கத்திற்கு நியாயமான விசாரணைகளை நடத்தும் தேவையில்லை எனவும் விசாரணை என்ற போர்வையில் தனக்கு சேறுபூசுவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
மினுவங்கொடை உடுகம்பொலவில் சிரேஷ்ட அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் ரெஜி ரணதுங்கவின் 81வது ஜனன தின நிகழ்வில் கலந்துக்கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொருட்களின் விலைகள் குறைந்தாலும் மக்களிடம் பொருட்களை கொள்வனவு செய்ய கையில் பணம் இல்லை. இதுதான் பிரச்சினையாக உள்ளது. இப்படியான நிலைமைக்கு அரசாங்கம் நாட்டை இட்டுச் சென்றுள்ளது. எங்களது ஆட்சிக்காலத்தில் மக்களிடம் போதுமான அளவு பணம் புழங்கியது எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.