குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகி, வேறு ஒருவருக்கு கட்சியின் தலைமை பதவியை வழங்குவதற்கான காலம் வந்துள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் நடந்துள்ள ஊழல், மோசடிகள் குறித்து தெரிவிப்பதற்காக மாதிவலையில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அங்கு பால் போத்தல் ஒன்றை உதாரணமாக காட்சிப்படுத்தி பிரதியமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த பால் போத்தலை எடுத்துக்கொண்டால், இதற்கு காலாவாதியாகும் தினம் இருக்கின்றது. இதற்கு மாத்திரமல்ல அனைத்துக்கும் காலாவதியாகும் தினம் இருக்கின்றது.
கிரிக்கெட்டை உதாரணமாக எடுத்துக்கொண்டால், நாங்கள் எங்களது பிரதமர் துடுப்பாட பல சந்தர்ப்பங்களை கொடுத்தோம். பல முறை மைதானத்திற்கு சென்று விளையாட வாய்ப்பை கொடுத்தோம். தற்போது எங்களுக்கு துடுப்பெடுத்தாட சந்தர்ப்பத்தை தாருங்கள். நாங்கள் எப்படி விளையாடுவோம் என்று யூகிக்க முடியாது.
எங்களுக்கு மாத்திரமல்ல சஜித்துக்கும் விளையாட சந்தர்ப்பம் வழங்க வேண்டும். நவீன் திஸாநாயக்க, என அனைவருக்கும் துடுப்பாட சந்தர்ப்பம் வழங்க வேண்டும். சகல சந்தர்ப்பங்களிலும் பிரதமர் விளையாட அனுமதி கேட்பது தவறு எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.