இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள நளினியை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரும் வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் கைதான பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனைக் கைதிகளாக கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளனர்.
இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணைப்படி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி நளினி கடந்த 2015-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நளினியின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டதனைத் தொடர்ந்து தமிழக அரசு தன்னை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி நளினி மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில் அரசு தலைமை வழக்கறிஞர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதனால், இதுதொடர்பாக தமிழக அரசால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை எனத் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் வரும் 27-ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.