குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
அரசாங்கத்தில் இருந்து அண்மையில் விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்று பேருக்கு அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சு பதவிகளை வழங்கி மீண்டும் அரசாங்கத்தில் இணைத்து கொள்வதற்காக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக்கட்சியினரில் சிலர் இரகசிய முன்னெடுப்புக்களில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. இவர்கள் மூவரும் முன்னாள் பிரதியமைச்சர்கள் எனக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேர் அணி ஒரே நோக்கத்திற்காக குரல் கொடுத்ததாகவும் எவரும் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழ் அரசாங்கத்தில் இணைய போவதில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகிக்கும் சிலர் அமைச்சு பதவிகளை கைவிட்டு தம்முடன் இணைந்து கொள்ள உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மே மாதம் 8 ஆம் திகதிக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அங்கு எடுக்கப்படும் முடிவுகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அனுராத ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.