இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து நாடுதிரும்பி, யாழ் மாவட்டத்தில் மீள்குடியேறிவரும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இதுவரையில் இவ்வாறு 1,110 குடும்பங்கள் இவ்வாறு மீளக்குடியேறியுள்ளன எனத் தெரிவித்த அவர் யாழில், மீள்குடியேறுவதற்காக அவர்கள் யாழ். மாவட்ட செயலகத்தில் புதிய பதிவுகளை மேற்கொண்டுவருகின்றனர எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவு நடவடிக்கைகள், மீள்குடியேற்ற புனர்நிர்மாண, சிறைச்சாலைகள் இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சின் எற்பாட்டில், யாழ் மாவட்ட செயலகத்தின் காணி கிளையில் யாழ். மாவட்ட செயலக மேலதிக செயலாளர் காணி எஸ்.முரளிதரன் தலைமையில் நேற்று நடைபெற்றன.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அதற்காக காணியில்லாத 25 குடும்பங்களுக்கு காணியுடன் சேர்ந்த புதிய வீட்டுத்திட்டத்தை வழங்க தனியார் நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.