ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுடன் தொடர்புடைய தகவல்கள் மற்றும் சாட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் இரண்டுவார காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்
ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துடன் இணைந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி; இதனைத் தெரிவித்தார். ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சர்வதேச ரீதியாக இருந்து வரும் அங்கீகாரத்தை பாதுகாத்து சிறந்த விமான சேவையாக அதன் நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல வேண்டியதன் தேவையை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீ லங்கன் விமான சேவையுடன் இணைந்த 06 தொழிற்சங்கங்களில் 05 தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். நிறுவனத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்த்து நிறுவனத்தின் நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வது குறித்து விரிவான கருத்துக்களும் முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.