இலங்கை காவல்துறையினரின் உத்தியோகபூர்வ சீருடைகள், உத்தியோகபூர்வ அடையாள அட்டைகள் மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்த ஒருவர் குற்ற ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றையதினம் மீகொட காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட தாம்பே பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு தரநிலையில் உள்ள காவல்துறையினரின் உத்தியோகபூர்வ சீருடைகள், காவல்துறைஅதிகாரிகளின் உத்தியோகபூர்வ அடையாள அட்டைகள் , சேவை ஆவணங்கள் , உத்தியோகபூர்வ இலச்சனை பொறிக்கப்பட்ட தொப்பிகள் , வேறு நபர்களுடைய தேசிய அடையாள அட்டைகள் , கடவுச்சீட்டு உட்பட போலி ஆவணங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட 4 கத்திகளும் 20 தோட்டாக்களும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறைத் தரப்பு தெரிவித்துள்ளது
கைது செய்யப்பட்டவர் 49 வயதான போரகே பியல் சந்திரகுமார என்னும் மீகொட பிரதேசத்தைச் சேர்ந்த பிரித்தானிய குடியுரிமை பெற்றவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர் இன்றையதினம் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைளை குற்ற ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.