இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளுக்கு பெருகி வரும் ஆதரவை அடுத்து, 104 நாடுகளைச் சேர்ந்த மகளிர் மற்றும் ஆண்கள் அணிகளுக்கு, இருபதுக்கு இருபது அந்தஸ்து அளிக்க சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது.
கொல்கத்தாவில் நடந்து வருகின்ற சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயற்குழுக் கூட்டத்தில், கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்த பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதிலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது 12 முழுநேர உறுப்பு நாடுகளைத் தவிர, ஸ்கொட்லாந்து, நெதர்லாந்து, ஹொங்கொங், ஐக்கிய அரபு ராச்சியம் , ஓமான், நேபாளம் என, 18 நாடுகளுக்கு இருபதுக்கு இருபது அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது, 104 நாடுகளைச் சேர்ந்த மகளிர் மற்றும் ஆண்கள் அணிகளுக்கு இருபதுக்கு இருபது அந்தஸ்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி , இந்தாண்டு ஜூலை 1 முதல் விளையாடப்படும் அனைத்து மகளிர் இருபதுக்கு இருபது போட்டிகள் மற்றும், 2019 ஜனவரி 1 முதல் விளையாடப்படும் ஆண்கள் இருபதுக்கு இருபது போட்டிகள் அனைத்துக்கும் சர்வதேச அந்தஸ்து அளிக்கப்பட உள்ளது. மேலும், சர்வதேச அளவில், இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான தரவரிசையும் அளிக்கப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது