கொரிய பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் உறுதி பூண்டுள்ளனர். வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு பின்னர், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இரு நாட்டு தலைவர்களும் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் உறுதி பூண்டுள்ளனர்.
அத்துடன் இரு நாடுகள் இடையிலான விரோத நடவடிக்கைகளை நிறுத்துவது. இரு நாடுகளையும் பிரிக்கும் ராணுவமயமற்ற பகுதியில், பிரச்சார ஒலிபெருக்கிகளை நிறுத்துவதன் மூலம் இப்பகுதியை அமைதி பகுதியாக மாற்றுவது. அமெரிக்க மற்றும் சீனாவை உள்ளடக்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது, போரினால் பிரிக்கப்பட்ட குடும்பங்களை மீண்டும் ஒருங்கிணைத்தல் , எல்லைகளை புகையிரத மற்றும் வீதிகள் மூலம் இணைத்தல் மற்றும் நவீனமயப்படுத்துதல், இந்த வருடம் நடைபெறவுள்ள உள்ள ஆசிய விளையாட்டு போட்டிகள் உட்பட, விளையாட்டு போட்டிகளில் கூட்டாக பங்கேற்பது என்பன் இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்ட கூட்டு அறிக்கையில் ஒப்புக் கொண்ட விடயங்களாகும்.
தென்கொரிய ஜனாதிபதியுடன் இணைந்து எல்லையில் மரம் நட்ட கிம் ஜாங்-உன், இரு நாடுகளுக்கும் புதிய வசந்தம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். குறித்த மரம் நடுகைக்கான மண் மற்றும் நீர் இரண்டு நாடுகளிலிருந்தும் எடுக்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது
வட கொரிய, தென் கொரிய ஜனாதிபதிகள் சந்திப்பு
Apr 27, 2018 @ 04:51
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடகொரிய மற்றும் தென் கொரிய ஜனாதிபதிகள் சந்திப்பு நடத்தியுள்ளனர். 1953ம் ஆண்டு கொரிய யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக வடகொரிய ஜனாதிபதி ஒருவர், தென் கொரியாவிற்கு பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன், தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன்னை சந்தித்துள்ளார். எல்லைப் பகுதியில் இரண்டு நாடுகளினதும் தலைவர்கள் கைலாகு செய்து கொண்டுள்ளனர். இதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுக்கும் இடையில் எதிர்வரும் ஜூன் மாதம் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது