முகப்புத்தக பயனாளர்களின் தகவல் கசிந்தது தொடர்பாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மற்றும் முகப்புத்தக நிறுவனங்கள் அளித்த பதிலில் முரண்பாடு இருப்பதாகக் கூறி அந்த நிறுவனங்களுக்கு இந்திய மத்திய அரசு மீண்டும் கடிதம் அனுப்பி உள்ளது.
பிரித்தானியாவினைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற அரசியல் தகவல் ஆய்வு நிறுவனம், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முகப்புத்தக பயனாளர்களின் தகவல்களைத் திரட்டி, போலி செய்திகள் மூலம் மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் துணை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்காக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் பாஜகதான் இந்த சேவையை ஏற்கெனவே பயன்படுத்தியது என காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
இதையடுத்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு இரு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு ஏற்கெனவே கடிதம் அனுப்பி இருந்தது.
ஆதற்கு அந்த இரு நிறுவனங்களின் பதிலும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக உள்ளதால், மேலும் சில கேள்விகளை எழுப்பி, எதிர்வரும் மே 10-ம் திகதிக்குள் பதில் அளிக்குமாறு இரு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பி உள்ளது.
இதேவேளை , இந்திய முகப்புத்தக பயனாளர்களின் தகவல் கசிந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது