2021-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டு உலக்கோப்பை இருபதுக்கு இருபது போட்டியாக நடத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை அறிவித்துள்ளது. ஐ.சி.சி. சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற குறித்த போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கிண்ணத்தினை கைப்பற்றியிருந்தது.
இந்த நிலையில் எதிர்வரும் காலங்களில் சம்பியன்ஸ் கோப்பை போட்டி இனி நடைபெறாது எனவும் அதற்குப் பதிலாக இருபதுக்கு இருபது போட்டியாக நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை நேற்றையதினம் அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் 5 நாட்களாக நடைபெற்ற அ சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையின் செயல் அதிகாரிகளின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சம்பியன்ஸ் கோப்பை போட்டி 50 ஓவர் உலக கோப்பை போட்டி போன்றே இருப்பதனால் இரண்டையும் வேறுபடுத்தி பார்ப்பது கடினமாக இருப்பதனால் அதனை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு ஐசிசி உலக இருபதுக்கு இருபது போட்டிகள் நடைபெறும் எனவும் 2020-ம் ஆண்டில் அவுஸ்திரேலியாவிலும் 2021-ம் ஆண்டில் இந்தியாவிலும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது