யுத்தத்தினால் பாதிகப்பட்ட பிரதேசங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் மகிழ்ச்சி அடைவதாக தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞான சோதி தெரிவித்தார்.
-தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் அமைக்கப்பட்ட மடுமாதா கைப்பணி அமைப்பிற்கான கட்டிடம் இன்று வெள்ளிக்கிழமை(27) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் பிரதேசச் செயலாளர் என்.பரமதாஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞான சோதி ஆகியோர் இணைந்து குறித்த கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து உரையாற்றுகையிலேயே தேசிய ஒருங்கினைப்பு நல்லிணக்க அமைச்சின் செயலாளர் சிவஞான சோதி அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் அமைக்கப்பட்ட இக்கட்டிடத்தை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இத்திட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு நன்மையடைய முடியும்.
தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் கீழ் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இருக்கின்றார்.எமது அமைச்சிற்கு இவ்வருடம் அதிகமான நிதி மீள் குடியேற்ற செயற்பாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அதிகமான நிதி வழங்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பிரதி நிதிகள் ஜனாதிபதியிடமும்,பிரதமரிடமும் பல கோரிக்கைகளை முன் வைத்தனர்.
நிதி அதிகரிப்பிற்கான முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியதன் காரணத்தினால் இந்த வருட வரவு செலவு திட்டத்திலே எமது அமைச்சிற்கு 1750 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான வேலைத்திட்டத்திற்கும் அவர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள். -அமைச்சரவை அதற்கான அங்கிகாரத்தை வழங்கியுள்ளது.
மேலும் வீதிகளை அமைப்பதற்கு பெருந்தொகையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட 56 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த காரரிடமே நிதியை கடனாக பெற்றுக்கொண்டு வேலைத்திட்டங்களை மேற்கொள்ள முடியும்.எனவே குறித்த கருத்திட்டம் மூலம் நீங்கள் பூரண பயனை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வின் போது தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு சுயதொழில் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.