குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கரைச்சி பிரதேச சபையின் தவிசாளார் கரைச்சி பிரதேச செயலகத்திற்கு செலுத்த வேண்டிய கடன் பணத்தை இதுவரை செலுத்தவில்லை எனவும் காவல் நிலையத்தில் முறையிட்ட போதும் ஒரு தவணை செலுத்திவிட்டு மிகுதியை செலுத்தவில்லை எனவும் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் கிராம அலுவலராக கடமையாற்றிய போது பிரதேச செயலகத்தில் இடர் கடன் முப்பதாயிரம் ரூபாவினை 1997 காலப்பகுதியில் பெற்றிருந்தார். குறித்த கடன் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டு அது மாதாந்தம் சம்பளத்திலிருந்து கழிக்கப்படுவது வழமை. ஆனால் இவர் அப்போது வகித்த கிராம அலுவலர் பதவிக்கு சமர்பித்த கல்வித்தகமைச்சான்றிதழ் போலியானது என தகுதிகாண் காலத்தில் நிரூபிக்கப்பட்டு கிராம அலுவலர் பதவியிருந்து நிறுத்தப்பட்டார்.
இதன் பின்னர் தான் பெற்ற கடனையும் அவர் செலுத்தவில்லை. இந்த நிலையில் பிணையாளிகளிடம் இருந்து கடன் பணத்தை அறவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது யுத்தகாலத்தில் பல ஆவணங்கள் இல்லாது போனமையினால் பிணையாளிகள் விபரத்தினை அறியமுடியவில்லை.
எனவே பிரதேச செயலகம் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்த போது தான் மாதாந்தம் ஜயாயிரம் ரூபா வீதம் செலுத்துவதாக தெரிவித்து ஒரு தடவை செலுது்திய பின்னர் இதுவரை மிகுதி பணத்தை செலுத்தவில்லை. என பிரதேச செயலகத்தின் தகவல் தெரிவிக்கின்றன.