குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி பூநகரி பிரதேச வைத்தியசாலையின் காணியினை அதிகாரிகளிடமிருந்து பாதுகாத்து எதிர்கால வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு உதவுமாறு பூநகரி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது
பூநகரி வைத்தியசாலைக்கு அதன் எதிர்கால அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு 15 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான விடுதிகள், மாற்று வலுவுள்ளோர் சிகிசை நிலையம், குடும்பலநல உத்தியோகத்தர்கள் விடுதி, மருத்துவ அதிகாரி அலுவலகம், சாரதிகளுக்கான விடுதி, மற்றும் கழிவகற்றல் முறைக்கான கட்டடம், சிறுவர் நோயாளர் விடுதி அதனை தவிர மேலதிக நோயாளர் விடுதிகள் என்பவற்றை அமைப்பதற்கு போதுமான நிலப்பரப்பு தேவையாக உள்ளது. இதனை கருத்தில் எடுத்தே குறித்த பரப்பளவு காணி பூநகரிவைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்டது.
ஆனால் தற்போது கணக்காய்வாளர்கள் இவ்வளவு பரப்பளவு காணி ஏன் தேவை என ஜய வினாவை எழுப்பியதனை தொடர்ந்து மாகாண சுகாதார திணைக்களம் மற்றும், கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் திணைக்களம் என்பன வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியை பிரதேச செயலகத்திற்கு கையளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொது மக்கள் கவலையும் குற்றமும் சுமத்தியுள்ளனர்.
மீள் குடியேற்றம் நடைபெற்றபோது பூநகரி வைத்தியசாலை காணி குறித்த விடயங்களைக் கையாண்ட அதிகாரிகள் (அமரர் இராசநாயகம் தவிர) ஏனையோர் தற்போதும் அரச சேவையில் உள்ளனர். எனவே ஏன் இவ்வளவு பரப்பளவு காணி ஒதுக்கப்பட்டது என்ற கணக்காய்வாளர்களின் கேள்விக்கு இந்த அதிகாரிகளிடம் விளக்கத்தினை பெற்று கணக்காய்வாளர்களின் ஜய வினாவுக்கு தற்போதைய அதிகாரிகள் விளக்கத்தினை சமர்பித்து வைத்தியசாலை காணியை பாதுகாக்க வேண்டுமே தவிர காணி தேவையில்லை என்று அதனை அரசுக்கு மீண்டும் கையளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இவ்வாறு காணியை அரசிடம் மீண்டும ் கையளித்துவிட்டு எதிர்காலத்தில் வைத்தியசாலையில் மேற்சொன்ன அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு காணி போதுமானதாக இல்லாத நிலை ஏற்படுகின்ற போது அரசிடம் இருந்து குறித்த காணியை பெற்றுக்கொள்ள முடியாது சூழல் ஏற்பட்டு விடும். எனவே வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியை அரசிடம் கைளயிப்பதனை நிறுத்தி விட்டு குறித்த காணியை பாதுகாக்கும் நடவடிக்கைக்யை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது
தற்போது தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்வதற்கு அங்கு ஏற்பட்டுள்ள காணி பிணக்கும், நிலப்பற்றாக்குறையும் பிரதான காரணமாக விளங்குகிறது. எனவே இது போன்றதொரு நிலைமை எதிர்காலத்தில் பூநகரி வைத்தியசாலைக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என பொது மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் சி. குமாரவேலை தொடர்பு கொண்டு வினவிய போது
பூநகரி பிரதேச வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 15 ஏக்ககர் காணி தொடர்பில் பாராளுமன்ற கணக்காய்வு குழுவினால் ஏன் இவ்வளவு காணி என கேள்வி எழுப்பட்டு அதற்கான விளக்கம் கோரி மாகாண அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாகாண பிரதம செயலாளர் எங்களுக்கு குறித்த காணி தேவைப்பாடு குறித்து விளக்கம் கோரியுள்ளார் எனவே நாங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு எவ்வளவு காணி தேவை என அளவீடும் ஆய்வு செய்த பின்னர் மிகுதி காணியை மீண்டும் பிரதேச செயலகத்திற்கு கையளிப்போம் என்றார்
மேலும் இன்று(27) பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலைமையில் இடம்பெற்ற பூநகரி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் இது தொடர்பில் பேசப்படவில்லை என்பதோடு, குறித்த பாராளுமன்ற குழுவில் குறித்த பாராளுமன்ற உறுப்பினரும் காணப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.