குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் மக்களின் உணர்வுகளோடு ஒன்றித்துள்ள மாவீரர் துயிலுமில்லங்களை அரச நிர்வாக அலகுக்குள் கொண்டுவரும் பிரேரணை சொந்த காசில் சூனியம் வைப்பதாகும் என கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் த.ரஜனிகாந் தெரிவித்துள்ளார்.
கரைச்சி பிரதேச சபையின் முதலாவது அமர்வில் மாவீரர் துயிலுமில்லங்களை பிரதேச சபையின் ஆளுகைக்குள் கொண்டுவரவேண்டும் என்று நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
துயிலுமில்லங்கள் துயிலுமில்லங்களாகவே இருக்க வேண்டும் அது தாவரவியல் பூங்கா என்றோ இடுகாடு சுடுகாடு என்றோ மாற்றம் பெறக் கூடாது. இதனை தமிழ் மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடந்த வருடம் தாவரவியல் பூங்கா என்று பிரதேச சபையினால் நாட்டப்பட்ட பெயர் பலகையினை கூட சில மணித்தியாலயங்களில் பொது மக்கள் பிடுங்கி எறிந்தனர். எனவே இந்த நிலைமையில் துயிலுமில்லத்தை தற்காலிக அரசியல் இலாபங்களுக்காகபிரதேச சபைகளுக்கு கீழ் கொண்டுவருவது என்பது மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடும். எனவே இதனை உணர்ந்து தூரநோக்கோடு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
முல்லைத்தீவிலும், வவுனியா தமிழ் பிரதேசத்தில் சில பிரதேச சபைகளில் தேசிய கட்சிகள் ஆட்சியமைத்தது போன்று என்றோ ஒரு நாள் அரசியல் சூழ்நிலைகள் மாறி கரைச்சி பிரதேச சபையின் ஆட்சியதிகாரமும் தேசிய கட்சிகளின் கைகளுக்குச் சென்றால் அந்தச் சந்தா்ப்பத்தில் துயிலுமில்லத்தின் நிலை என்னவாகும்?
அவ்வாறான சூழலில் சபையின் தவிசாளர் தன்னுடைய கட்சியின் தலைவரான ஜனாதிபதியோ, பிரதமரோ என்ன சொல்கின்றனரோ அதனையே கேட்டு செயற்படுவார். கட்சியின் தலைமை கடும்போக்கு நிலைப்பாடு கொண்டவராக இருந்தால் அதனையே இங்கு தவிசாளராக இருப்பவரும் வெளிப்படுத்துவார். இது சொந்த காசில் சூனியம் வைத்தது போன்றாகிவிடும்
எனவே துயிலுமில்லம் விடயத்தில் அதனை எந்த அரச நிர்வாக அலுகுக்குள்ளும் கொண்டுவருகின்ற எந்தச் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது பொது அமைப்பொன்றின் பொறுப்பின் கீழ் இருக்கின்றவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.