குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் நடந்துள்ளதாக கூறப்படும் மிகப் பெரிய நிதி மோசடி தொடர்பாக கைதுசெய்ய முயற்சிக்கப்பட்டு வரும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க, தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள சிகப்பு அறிக்கை பிடிவிராந்தை திரும்ப பெறுமாறு, சர்வதேச பொலிஸாரிடம் மேன்முறையீடு செய்துள்ளார். தன்னை கைதுசெய்யும் நடவடிக்கையானது சட்டரீதியானது அல்ல எனக் கூறியே அவர் இந்த மேன்முறையீட்டை முன்வைத்துள்ளார்.
உதயங்க வீரதுங்கவை கைதுசெய்வதற்கான சரியான காரணங்களை தமக்கு வழங்குமாறு சர்வதேச பொலிஸார், இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கோரியுள்ளனர்.
ஏழு மிக் விமானங்களை கொள்வனவு செய்த போது, பல மில்லியன் ரூபா மோசடி நடந்துள்ளதாக உதயங்க வீரதுங்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. துபாய் பொலிஸாரினால், அண்மையில் கைதுசெய்யப்பட்ட உதயங்க வீரதுங்கவை தம்மிடம் கையளிக்குமாறு இலங்கை பொலிஸார், துபாய் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.