யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் கட்டும் பணிகளை அரசாங்கம் தலையிட்டு தடை செய்தமை கண்டிக்கத்தக்க செயலென தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சமூகங்கள், முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அனுபவித்த கட்டமைப்புகளாக உள்ளன. அவற்றில் கல்வி கற்கும் சமூகத்தினர் போராலும் இனப் படுகொலையாலும் நேரடியாக பாதிக்கப்பட்டு அதன் வலியை சுமந்தவர்களாக உள்ளனர்.
அந்த வகையில், அவர்களின் நினைவேந்தலைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தச் செயற்பாடு ஆத்திரமூட்டுவதாக அமைந்துள்ளதென அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறான உண்மைகள் பல்கலைக்கழகங்களிலேயே பதிவு செய்யப்படவேண்டியுள்ளவென்பதனால் மாணவர்கள் தமது செயற்பாட்டை தொடரவேண்டும் எனவும் பல்கலைக்கழக மாணவர்களின் தலைமையில் நடைபெறும் இத்தகைய செயற்பாடுகளுக்கு தாம் முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.