நியூசிலாந்தில் இருந்து வரதராஜன்…
1975 ஆம் ஆண்டு ஜே.ஆர். தமது பரிவாரங்களுடன் யாழ் வந்தார். அப்போது வடக்கில் சில இடங்களிலும் நெல்லியடியிலும் கூட்டங்கள் இடம்பெற்றன, பருத்தித்துறை கடற்கரை மைதானத்தில் பெரிய கூட்டம் இடம்பெற்றது. 1970 பதவிக்கு வந்த அரசு 1975 இல் தேர்தல் வைக்க வேண்டிய காலத்தில் இந்த வடக்கு விஜயம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது நாட்டிலியங்கியது ஸ்ரீமாவோ ஆட்சி ஜே ஆர். எதிர்க்கட்சித்தலைவர். நான் பருத்தித்துறைக் கூட்டத்திற்குப் போயிருந்தேன்.
ஆட்டோகிராபில் கையொப்பம் வாங்குவது எனது பொழுதுபோக்குகளில் ஒன்று. வந்தவர்கள் எல்லோரிடமும் ஒப்பம் வாங்கினேன். இன்று அந்தப் புத்தகம் என்னிடம் இல்லாதபோதிலும் கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் நினைவில் உள்ளனர். கூட்டத்தில் பங்குபற்றிய ஜே. ஆர். ஆங்கிலத்தில் பேச அப்போது யாழ் மாவட்ட ஐ.தே.க அமைப்பாளராகவிருந்த ஆர் ஆர் நல்லையா அவரது உரையைத் தமிழிற்கு மொழி பெயர்த்தார். “தமிழ்ப்பிரதிநிதிகளை மதிக்கும் வட்ட மேசை மாநாடு தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வான முடிவை எடுக்கும்; அதனை நாம் செய்வோம்” என்றார் ஜே.ஆர்.
அங்கு உரையாற்றிய மொண்டெகு ஜயவிக்ரம, எம் டி எச் ஜயவர்த்தன, காமினி திசாநாயக்க, நீர்கொழும்பு எம்பி பெர்ணான்டோ ஆகியோரும் ஆங்கிலத்தில் பேசினர்.எம் டி எச் அப்போது ஐ.தே கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்தவர். காமினி திசநாயக்க பேசும்போது தாம் அடுத்த முறை வரும்போது தமிழில் பேச விரும்புவதாகச் தெரிவித்தார். மக்கள் கைதட்டி வரவேற்றனர் காலம் அவரை அடுத்தமுறை அம் மக்களிடம் வருவதற்கு இடம் கொடுக்கவில்லை.
எம் எச் மொகம்மட், ஏ.சி.எஸ். ஹமீது, கே.டபிள்யூ.தேவநாயகம். ஏ.எல் ரஹீம் ( மன்னார்) அப்துல் மஜீத், ஆகியோர் தமிழில் பேசினார்கள். ஜே. ஆர் பேசியபின்னர் பேசிய பிரேமதாச பேசத் தொடங்கும் போது ஆங்கிலத்தில் தொடங்கி சபையோரை விளித்துவிட்டு தாம் தமிழில் பேச விரும்புவதாகச் சொல்லித் தமது பேச்சை ஆரம்பித்தார். தமது ” சேட்டில் ” வைத்திருந்த காகிதத்தை எடுத்து அவர் தமிழில் வாசித்தார். இன்று போல அன்று ” புரொம்டர்” வசதியிருக்கவில்லை.
” இன்றைய அரசியலமைப்புச் சட்டத்தை தமிழ் மக்களாகிய நீங்கள் ஏற்கவில்லை. உங்களுடைய பிரதிநிதிகளை இந்த அரசு அரசியலமைப்பு உருவாக்கத்தில் மதிக்கவில்லை. ஐ.தே க பதவிக்கு வந்ததும் தமிழ்க் கட்சிகளுடன் நாம் பேசுவோம். புதிய அரசமைப்புச் சட்டத்தின்படி ஜனாதிபதி பிரதமரின் முதுகைச் சொறிகிறார். பிரதமர் ஜனாதிபதியின் முதுகைச் சொறிகிறார்” என்று பிரேமதாச தமிழில் வாசித்தார். ( *அரசியலமைப்புச் சட்டம் : 1972, 1ஆவது குடியரசு அரசியலமைப்பு ஆகும், ஜனாதிபதி என்பது வில்லியம் கோபால்லாவயையும் பிரதமர் என்பது ஸ்ரீமாவோ வையும் குறிக்கும்) பலத்த கரகோசம் பிரேமதாசவின் உரைக்கே அங்கு இடம்பெற்றது.
இவரைத் தொடர்ந்து பின்னர் வந்த காமினி அழகிய ஆங்கிலத்தில் பேசினாலும் தாம் தமிழில் அடுத்த முறை பேசுவேன் என்றார். பருத்தித்துறைக் கூட்டத்திற்கு மறுநாளாக யாழ் முற்றவெளியில் இடம்பெற்ற கூட்டம் குழப்பத்தில் முடிந்தமை குறிக்கத்தக்கது. பிரேமதாச யாழ்ப்பாணத்தில் அடுத்துப் பேசிய நிகழ்வு தந்தை செல்வநாயகத்தின் இறுதி அஞ்சலிக் கூட்டமாகும்..
இங்கும் ஐ.தே.க சார்பில் உரையாற்றிய பிரேமதாச தமது அஞ்சல் உரையை தமிழில் நிகழ்த்தினார். “திரு .செல்வநாயகம் உயர்ந்த குணம் உடையவர். இலங்கையில் வாழும் மற்ற இனத்தவருக்கு அவர்களின் உரிமைகளுக்கு பிரச்சினையில்லாமல் தமிழ்மக்களின் உரிமைக்காகப் போராடியவர் அவர்” என்றார்
பிரேமதாச.
பிரேமாவின் அந்த உரை பற்றி அக்கால நகைச்சுவை ஒன்றுஉண்டு. அவர் பேசும்போது தந்தை செல்வாவை ” திருச்செல்வநாயகம்” என அடிக்கடி ” வாசித்ததை” அக்காலத்தில் மக்கள் பேசிக் கொண்டதுண்டு. பிரேமதாச நான் அறிந்த வரையில் பின்னர் தமிழில் வடக்கில் பேசிய கூட்டம் கரவெட்டி கன்பொல்லை இராசகிராமத் திறப்புவிழா ஆகும். இது நடந்தது 1981 ஆம் ஆண்டு .
இதற்கு முன்பு 1968 , 69 இல் கரவெட்டிப் பிரதேசத்தின் முக்கிய நீர் வழங்கல் திட்டமான அத்துளுத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வந்திருந்தார். அப்போது உபசபாநாயகராகவிருந்த அமரர். மு சிவசிதம்பரம் இதற்காக இவரை அழைத்து வந்தார். பிரேமதாச அவ்வேளை உள்ளூராட்சி அமைச்சராக இருந்த எம். திருச்செல்வத்தின் பிரதியமைச்சராகவிருந்தார். அவ்வேளை அவர் தமது பேச்சில் தமிழும் கலந்து பேசினாரா என்பது தெரியவில்லை.
கரவெட்டி இராசகிராமத் திறப்புவிழாக் கூட்டத்திற்கும் நான் போயிருந்தேன். உடுப்பிட்டி எம்.பி இராசலிங்கம் ( தமிழர் விடுதலைக் கூட்டணி) இளைஞர்களின் எதிர்ப்பையும் மீறி இவ் வைபவத்தில் கலந்துகொண்டார்.இராசலிங்கத்தின் முயற்சிலேயே இந்த மாதிரிக் கிராமம் உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கூட்ட ஆரம்பத்தில் இடம்பெற்ற வரவேற்பு ஊர்வல தொடக்கப்புள்ளியான நிறைகுட மேசையடியில் , பிரேமதாசா முக்கிய ஐ.தே. க ஆதரவாளர் ஒருவரால் தமக்கு இடப்பட்ட பச்சை மாலையை உடனேயே தமது கழுத்திலிருந்து கழற்றி, இராசலிங்கத்துக்கு இட்டார்.
தமிழர் பண்பாட்டின்படியாக இராசலிங்கம் வட்டாரக் கல்வியதிகாரியாக இருந்த காலத்திலேயே வைபவங்களில் தமக்கிடப்படும் மாலையை கூட்டம் முடியும்வரை கழற்றுவதில்லை. இது தமக்குத் தனிநாயகம் அடிகள் சொல்லித் தந்த பண்பு என இராசலிங்கம் எனக்கு இதுபற்றி ஒருமுறை சொன்னார். இந்தப் பழக்கத்தில், இராசகிராமத் திறப்புவிழா மேடையிலும் பிரேமதாச தமக்கு அணிந்த பச்சை மாலையுடன் அமர்ந்திருந்தார்.
பிரேமதாச பேசவந்தார். தமிழில் பேச்சைத் தொடங்கினார். இங்கு இன்னும் ஒரு சுவையான விடயம் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். பிரேமதாசவின் அறிவிப்பாளராக வந்தவர் அமரர் கே.எஸ்.ராஜா அவர்கள். பிரேமதாசவைவிட ராஜாவுக்கே சனத்தின் அபிமானம் குரல்களாய் ஒலித்தது. அவரது ஒவ்வொரு அறிவிப்புக்கும் கிடைத்த கரகோஷம் பேசிய பிரமுகர்களைவிட அதிகமாகவேயிருந்தது. ராஜா தனது தனித்துவத்தை விடாமல் செய்த அறிவிப்பு இது எனலாம். பிரேமதாசவின் உரை அறிமுகத்தை ராஜா இப்படிச் செய்தார்:
அன்பார்ந்த இரசிகப் பெருமக்களே! நான் யார்?
கூட்டம்: ராஜா, கே.எஸ் ராஜா!
ராஜா: ஆம் நான் உங்கள் ராஜா! என்னுடன் இங்கு வைத்திருப்பவர் உங்கள் நாட்டின் ராஜா! பிரேமதாசா!
அடுத்து இந்த மேடையில் ஸ்ரீலங்கா தேசத்தின் பிரதமர் மக்கள் தலைவன்! வறியமக்களின் தலைவன்! ஏழைகளின் தோழன்! பாட்டாளி மக்களின் …….ரணசிங்க பிரேமதாச அவர்களை என்று அழைத்தார்.. ராஜா சொல்லிமுடியும் வரை பலத்த கரகோசம் தொடர்ந்தது. அதுவரை பிரேமதாச ராஜாவையே பார்த்துப் புன்னகைத்தபடியே நின்றார். அவர் உரையாற்றும்போது, அரசாங்கத்துடன் கூட்டணி காட்டியுள்ள நல்ல உறவுக்கு நன்றி சொன்னார். தமிழ் மக்களிடத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் பல உள்ளன என்றார். அவற்றிற்கு அபிவிருத்தி மூலமே தீர்வு காணமுடியும் என்றார். கூட்டணி இன்னும் அரசுடன் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்றார்.
“இங்கே பாருங்கள்; திரு இராசலிங்கம் மேடையில் இருக்கிறார். இராசலிங்கத்தின் முயற்சியால் தான் இந்தக் கிராமம் உங்களுக்கு கிடைத்தது. இராசலிங்கம் போல கூட்டணி எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்…..”என்ற அர்த்தத்தில் பேச மேடையின் விளக்குகள் அனைத்தும் ஒளியிழந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது!! அரச கட்டப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தால் அமைக்கப்பட்ட மேடையும் மைதானமும் இருடைந்தன.
திருமதி ஹேமா உடனடியாகத் தமது இருக்கையைவிட்டு எழந்து வந்து தம் கணவருக்கருகில் அவரைப் பிடித்தபடிநின்றார். அப்போது சில மெய்க்காவலர்களே இருந்தனர். அவர்களும் அவர் அருகில் வந்து மேடையில் நின்றனர். சில விநாடிகளில் மீண்டும் ஒளி வந்தது. பிரேமதாச சில நிமிடங்கள் பேசிவிட்டு அமர்ந்தார்
சுண்ணாகத்திலிருந்து கரவெட்டிக்கூடாக கரவெட்டி, தென்மராட்சிப் பகுதிக்கு செல்லும் அதிஅழுத்தமுள்ள மின்சாரக் கம்பிகளுக்கு கீழ், அவை செல்லும் கரணவாய்ப் பகுதியில் உருகி விழுந்த சைக்கிள் சங்கிலிகள் காணப்பட்டதாக அப்போது தெரியவந்தது. பலம் வாய்ந்த இயக்கங்கள் என்று எவையும் இல்லாத காலம் அது. எனினும், பிரேமதாச அவர்களைக் கரவெட்டியில் தொடங்கித் தொடர்ந்த அந்த இருள் 1993 மே தினம் வரை அவர் பின்னால் சைக்கிளில் சென்றது.
இலங்கையின் இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசவின் 25வது நினைவு தினம் இன்றாகும். கொழும்பு புதுக்கடையில் உள்ள ரணசிங்க பிரேமதாசவின் உருவச்சிலைக்கு அருகில் இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நினைவு தின நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. ரணசிங்க பிரேமதாச கடந்த 1993 ஆம் ஆண்டு மே தின ஊர்வலத்தின் போது, கொழும்பு ஆமர் வீதியில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஏழைகளின் தலைவர் என்று இன்றும் போற்றப்பட்டு வரும் தலைவராக இருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.