மியன்மாரில் ரோஹிங்கியா இன மக்கள் மீது ராணுவம் நடத்திய அடக்குமுறை, பாலியல்வன்முறை தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐ.நா.பாதுகாப்பு சபை தூதர்கள் வலியுறுத்தியுள்ளனர். மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கைன் மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்களுக்கு எதிராக இன அழிப்பு முயற்சியில் ராணுவம் ஈடுபட்டதனால் சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாNதுசுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
மியான்மரில் இருந்தபோது ரோஹிங்கியா இனப் பெண்களை ராணுவத்தினர் கொடூரமான முறையில் பாலியல்வன்முறைக்குட்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை சேர்ந்த தூதர்கள் கடந்த 4 நாட்களாக ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்பாக பங்களாதேசின் அகதிகள் முகாமில் தங்கியுள்ள மக்களை நேர்காணல் செய்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களை அவர்கள் நேரடியாக சந்தித்து குற்றச்சாட்டுகளையும், குறைகளையும் கேட்டறிந்தனர். அத்துடன் பங்களாதேஸ் பிரதமர் ஷேக் ஹசினா, மியான்மர் ஆளும்கட்சி தலைவர் ஆங் சான் சூகி மற்றும் அந்நாட்டின் முப்படை தளபதி மின் ஆங் ஹ்லியாங் ஆகியோரையும் அவர்கள் சந்தித்துப் பேசினர்.
இந்தநிலையில் மனிதநேயம் மற்றும் மனித உரிமைகளை மீறிய வகையில் நடந்ததாக கூறப்படும் ராணுவத்தின் அத்துமீறல்கள் மற்றும் பாலியல்வன்முறைகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபை தூதர்கள் வலியுறுத்தியுள்ளனர்.