கடந்த உள்ளூராட்சி தேர்தல் மன்ற தேர்தல் முடிவுகள் எமக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியமையை நாம் ஏற்றுக் கொண்டு அதற்கான திருத்தங்களையும், தீர்வுகளையும் மீட்டுப் பார்ப்பது பொருத்தமானது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று புதன் கிழமை(2) தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும்,எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டமானது நீண்ட காலமாக கூட்டப்படாது இருப்பதினால் அதனை விரைவில் கூட்டி சமகால அரசியல் விடயங்கள் மற்றும் உள்ளூராட்சி தேர்தலின் முன்,பின்னரான விடயங்கள் பற்றி ஆராய்வது உசிதமானதாக இருக்கும் என நம்புகின்றேன்.
கடந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் எமக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியமையை நாம் ஏற்றுக் கொண்டு அதற்கான திருத்தங்களையும், தீர்வுகளையும் மீட்டுப்பார்ப்பது பொருத்தமானது என கருதுகின்றேன்.
அத்துடன் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்திலும் கூட்டரசாங்கத்தின் இழு பறி நிலை அல்லது காலம் தாழ்த்தும் போக்கு எம் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி நிற்கின்றது.
இது விடயமாகவும்அரசுக்கு கூடுதலான அழுத்தங்களை பிரயோகப்படுத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
மேலும் இவ்வாண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் நடை பெறலாம் என எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலின் பரபரப்புக்கள் ஆரம்பித்திருப்பதால் தீர்க்கமான முடிவுகளை எடுத்து மக்களின் நம்பிக்கையை மீள கட்டியெழுப்பக் கூடிய வகையில் முன் கூட்டியே ஆயத்தப்படுத்துவதற்கு ஏதுவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை தயார் படுத்தலின் அவசியம் எல்லோராலும் உணரப்படுகின்றது.
எனவே இவைய அனைத்தையும் கருத்தில் கொண்டு எமது கட்சியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை விரைந்து நடாத்த பொருத்தமான நாளினை ஒழுங்கு படுத்தி தருமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.