குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என சில கிழக்கு தமிழ் மக்கள் கோர ஆரம்பித்துள்ளார்கள். வெகு விரைவில் பெரும்பான்மையான கிழக்கு தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என கோருவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.உதயன் பத்திரிகையின் வேட்கை நிகழ்வில் கலந்து கொண்டு ‘ தமிழ் ஊடகங்களின் சொல் நெறியும் , அவை பயணிக்க வேண்டிய திசையும்’ எனும் தொனிப்பொருளில் சிறப்புரை ஆற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகாண முதலமைச்சர் யார்? என கேட்டார்கள். நான் அதற்கு திருப்பி ஒரு கேள்வி கேட்டேன். கிழக்கு மாகாண சபை செயலிழந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. கிழக்கு மாகாணத்தில் தேர்தல் வைக்க அழுத்தம் கொடுப்பீர்களா ? கிழக்கு மாகாண முதலமைச்சர் யார் ? என ஏன் ஒரு ஊடகம் கேள்வி எழுப்பவில்லை ? உங்களுக்கு கிழக்கு மாகாணம் தேவையில்லையா ? வடகிழக்கு இணைப்பு தேவையற்றது என இவர் கூறினார் என கோடிட்டு காட்டி கொண்டு இருப்பது தான் உங்கள் வேலையா ? என கேட்டேன்.
அதற்கு அவர்கள் இந்த பதிலை மறுநாள் ஊடகத்தில் எழுதி இருக்க தானே வேண்டும், நாங்கள் இப்படி கேட்டோம். அவர் இப்படி கூறினார் என ஒரு ஊடகமும் அதனை பிரசுரிக்க வில்லை
கிழக்கு மாகாணத்தில் இவர்களுக்கு உள்ள கரிசனை இல்லை. ஆனால் வடகிழக்கு இணைப்பு வேண்டும். இன்றைக்கு முஸ்லீம் மக்கள் தான் வடகிழக்கு இணைப்பு வேண்டாம் என்கிறார்கள். தற்போது கணிசமான தமிழ் மக்களும் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். வெகு சீக்கிரம் பெரும்பான்மையான கிழக்கு தமிழ் மக்களும் வடகிழக்கு இணைப்பு வேண்டாம் என கோருவார்கள்.
கோசத்திற்கு மட்டுமே வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டும். இணைக்க விருப்பமான நாங்கள் அதற்கான சாத்தியங்களை நோக்கி நகரும் போது , தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுடன் இணங்கி போனாலே வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியம் என நான் கூறினால் அந்த உறவை வேண்டாம் என்கிறார்கள்.
இப்போதைக்கு சத்தியம் இல்லை என்று கூறினேன். அதில் இப்போதைக்கு என்பதனை விட்டு விட்டு சாத்தியம் இல்லை என போட்டார்கள். இப்பவும் சொல்லுறேன். அந்த உறவு மேம்பட வேண்டும். மேம்பட்டால் தான் அது சாத்தியமாகும். என தெரிவித்தார்.