குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
யாழ்ப்பாண நகரப் பகுதியில் அமைந்திருக்கும் நகைக் கடையொன்றில் 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான காப்புக்களை களவாடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணை பிணையில் செல்வதற்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் நேற்று அனுமதியளித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகைக் கடையொன்றுக்கு வந்த சிங்கள பெண்ணொருவர் வளையல்களை வாங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து நகைக்கடை பணியாளர்கள் பலவிதமான வளையல்களை பார்ப்பதற்காக எடுத்து கொடுத்துள்ளார்கள். அதன் பின்னர் அந்தப் பெண் தான் அவற்றிலிருந்து ஒரு சோடி காப்புக்களை வாங்கவுள்ளதாக தெரிவித்து வங்கியிலிருந்து பணத்தை எடுத்து வருவதாக கூறிச் சென்றுள்ளார்.
அவர் சென்ற பின்னர் நகைக்கடை உரிமையாளர் நகைகளை பரிசோதித்தபோது, அதில் இரண்டு சோடி காப்புக்கள் காணாமல் போயுள்ளதை அறிந்துள்ளார். கடையிலிருந்த கண்காணிப்பு கமராவின் பதிவுகளை பரிசோதித்த போது, அந்தப் பெண் இலாவகமாக காப்புக்களை திருடுவது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து நகைக்கடை உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பபட்டுள்ளது. காவற்துறையினரின் விசாரணையை தொடர்ந்து கடந்த மாதம் 8ஆம் திகதி அந்தப் பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
அவர் நீதிமன்றினால் தொடர்ச்சியாக நேற்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். நேற்று இவ்வழக்கு நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது குறித்த பெண்ணை நிபந்தனையுடனான பிணையில் செல்லுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.