குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 பேரை எதிர்க்கட்சியில் இணைத்து கொள்ள வேண்டாம் என்று கூறுபவர்கள் மறைமுகமாக அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்திற்கு உதவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிக்கு வரும் 16 பேரை அன்புடன் வரவேற்பதாகவும் அவர்கள் எதிர்க்கட்சியில் அமர்வதை தான் எந்த வகையிலும் எதிர்க்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 54 ஆக இருப்பது 75 ஆக அதிகரிக்க வேண்டும். சுமந்திரன், அனுர திஸாநாயக்க போன்றவர்கள் இணைந்து மே தினத்தை நடத்துகின்றனர். இவர்கள் 20வது திருத்தச் சட்டம் என்ற பிரிவினைவாத செயற்பாட்டினை முன்னெடுக்க முயற்சித்து வருகி்ன்றனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இல்லாமல் செய்வதன் மூலமே அதனை முளையிலேயே கிள்ளி எறிய முடியும்.
அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இல்லாதொழிக்கும் தேவை எமக்குள்ளது. இதனால், 16 பேர் அல்ல மேலும் பலர் எதிர்க்கட்சிக்கு வருவதை நாங்கள் எதிர்க்கவில்லை எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.