குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய கடற்படை வீரர்கள் சிலர் விசாரணை வட்டத்துள் கொண்டுவரப்பட்டுள்ளனர். வசீம் தாஜுதீன் கொலை சம்பந்தமாக விசாரிக்கும் இரகசியக் காவற்துறையினர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்திடம் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான வழக்கு இன்று (03) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களான முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அநுர சேனாநாயக்க, நாரஹேன்பிட்ட காவல் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா மற்றும் முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகர ஆகியொரும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விரிவான முறையில் விசாரணை செய்து கொண்டிருப்பதாக நீதிமன்றில் அறிக்கை ஒன்றை சமர்பித்த இரகசியப் காவற்துறையினர் தெரிவித்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய கடற்படை வீரர்கள் சிலரின் 2012 -1-1 முதல் 2015-08-05 வரையான காலப்பகுதிக்குறிய அவர்களின் வரவு பதிவேடு, சுருக்க சமிக்ஞைகள் மற்றும் விடுமுறை ஆவணங்கள் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக இரகசிய காவற்துறையினர் தெரிவித்தனர்.
அதன்படி இரகசியப் காவற்துறையினர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, விசாரணைகள் சம்பந்தமான முன்னேற்ற அறிக்கையை சமர்பிப்பதற்கு ஜூன் மாதம் 29ம் திகதி வரை அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.