மோடி பற்றி பேசியதில் இருந்து தனக்கு பொலிவுட் பட உலகில் வாய்ப்பு போய்விட்டதாக தெரிவித்துள்ளா நடிகர் பிரகாஷ்ராஜ் மோடி பெரிய ராட்சசன், அவரையும், பாஜகவையும் ஆட்சியைவிட்டு, இந்தியாவிட்டு அகற்றுவதே தன்னுடைய குறிக்கோள் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரகாஷ் ராஜின் நண்பரும், பத்திரிக்கையாளருமான கவுரி லங்கேஷ் இந்துத்துவா தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். இவரை கொன்ற கொலையாளி இப்போது கொலையை ஒப்புக்கொண்டுள்ளார். மோடி பற்றியும், ஆர்.எஸ்.எஸ் பற்றியும் பேசியதால் கவுரி கொல்லப்பட்டார். அவர் மரணத்தில் இருந்து அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் பிரகாஷ்ராஜ் தற்போது மிக முக்கியமான செவ்விஒன்றை பத்திரிக்கைகளுக்கு அளித்துள்ளார்.
பாஜகவிற்கு எதிராக கர்நாடகாவில் பிரச்சாரம் செய்யும் அவர் பிரச்சாரத்திற்கு இடையில் வழங்கிய செவ்வியில், ‘
“கவுரி மரணம் என்னை மாற்றியது. மாற்றியது என்பதைவிட என்னை உலுக்கியது. அவள் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தாள். அவளின் குரல் அடங்கிய போது, நான் குற்றவுணர்ச்சியுடன் உணர்ந்தேன். நாம் அவரை தனியாக போராட வைத்துவிட்டோம். இப்போது நான் பேச ஆரம்பித்துள்ளேன். என் குரலை இப்போது நிறுத்த பார்க்கிறார்கள். இதை செய்வது வேறு யாரும் இல்லை.. பாஜக மட்டும்தான்” என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.
மோடியின் வாக்குறுதிகள் பற்றி குறிப்பிட்ட பிரகாஸ்ராஜ்” நீங்கள் கொடுத்த வாக்குறுதி என்ன ஆகிவிட்டது என்று மோடியிடம் கேட்டால், உடனே அவர் நேருவை பற்றி பேசுகிறார், திப்பு சுல்தான் பற்றி பேசுகிறார், 100 வருடங்களுக்கு முன்பு நடந்ததை பேசுகிறார், இந்த 4 வருடம் என்ன நடந்தது என்று பேசுவது இல்லை. நான் ஏன் என் தாத்தா காலத்தில் நடந்ததை வைத்து இவருக்கு ஓட்டு போட வேண்டும். மோடி எவ்வளவு பேசினார், ஆனால் என்ன செய்தார்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தான் பற்றி பேசிய அவர் ”நான் மோடிக்கு எதிராக பேசினால் உடனடியாக என்னை பாகிஸ்தான் போக சொல்கிறார்கள். அங்கு தீவிரவாதமும், வறுமையும் இருக்கிறது என்கிறார்கள். நான் சொல்கிறேன், அங்கே மதம்தான் அரசியலை தீர்மானிக்கிறது. ஒரு மதம் நாட்டை ஆண்டால் , இப்படித்தான் பாகிஸ்தான் போல இந்தியாவும் ஆக வேண்டும் என்றுதான் ‘பக்தாக்கள்’ விரும்புகிறார்கள்.” எனக் கூறினார்.
பொலிவுட் பற்றி கருத்து வெளியிட்ட பிரகாஸ்ராஜ் ”சினிமாத்துறையில் பிரச்சனை இருக்கிறது. நான் மோடிக்கு எதிராக பேசியதற்கு பின் எனக்கு பொலிவுட்டில் வாய்ப்பு கொடுக்கவேயில்லை. நெருங்கிய நண்பர்கள் கூட விலகி சென்றுவிட்டார்கள். தென்னிந்திய படங்களில் மட்டும்தான் வாய்ப்பு கொடுக்கிறார்கள். இருக்கட்டும் என்னிடம் போதுமான பணம் இருக்கிறது. 365 நாள் வேலை பார்த்த நான் இனி குறைவாக பார்ப்பேன். போனால் போகட்டும். எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை” எனக் கூறினார்..
முக்கியமாக ”நான் அரசியலுக்கு வந்துவிட்டேனா என்று கேட்கிறார்கள். ஆம் நான் அரசியலுக்கு வந்துவிட்டேன். நான் இப்போது அரசியல்வாதிதான். நான் ஒன்றும் தேர்தலில் நிற்க போவது இல்லை. நான் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை. நான் எம்எல்ஏ ஆக போவதில்லை. இப்போது இருக்கும் பெரிய அசுரன் பாஜகதான், அவர்களை வீழ்த்துவதுதான் என் லட்சியம்.. அதுதான் என் அரசியல்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.