ஜப்பானிய பிரதமர் சின்சோ அபேயின் விசேட ஆலோசகர் Dr. Hiroto Izumi உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று (4) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தனர். இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கண்டறிவதற்காகவும் ஆய்வை மேற்கொள்வதற்காகவும் இந்த பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
துறைமுக அபிவிருத்தி, டிஜிட்டல் மயப்படுத்தலுக்கான உதவி, சக்தி வளம், சுற்றுலா, சுகாதாரம் உட்கட்டமைப்பு வசதி, சமுத்திர பாதுகாப்பு ஆகிய துறைகளில் இலங்கைக்கு வழங்கும் உதவியை மேலும் அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மின்சார நெருக்கடியை தவிர்ப்பதற்காக முன்னெடுக்கப்படும் சக்திவள திட்டங்களுக்கான நடவடிக்கைகளை விரைவாக நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ஜப்பானிய பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டினார்.
ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் திருகோணமலை துறைமுக அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், கிழக்கு மாகாண உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக உதவிகளை வழங்குமாறும் ஜனாதிபதி பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.