குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரும் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமானது நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றால், அதற்கு ஆதரவு வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஜனாதிபதியின் அதிகாரங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. 13 வது அரசியலமைப்புத் திட்டம் மூலம் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளதால், நாட்டை ஸ்திரமான நிலையில் வைத்திருக்க நிறைவேற்று அதிகாரம் இருப்பது அவசியம் என நாட்டில் பரவலாக பேசப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
விவசாயத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
20வது திருத்தச் சட்டம் இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. அது தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அதனை நன்கு ஆராய்ந்து, கட்சி என்ற வகையில் மத்திய செயற்குழுவை கூட்டி அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். அத்துடன் திருத்தச் சட்டம் காரணமாக நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாது என்றால், அடுத்து யார் ஆட்சிக்கு வரப் போகிறார்கள் என்பதை எல்லாம் கவனத்தில் கொள்ளாது அதற்கு ஆதவு வழங்கப்படும் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.