குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
எதிர்வரும் 2020ம் ஆண்டில் தாம் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தமது கடமைகளை தொடர்ந்தும் புதிய வழிமுறைகளின் கீழ் முன்னெடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த மூன்றாண்டு காலத்தில் தாம் பெற்றுக் கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் யாருடன் கூட்டணி சேர்வது என்பது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளதாகவும், யார் மெய்யாகவே நேர்மையான அரசியல்வாதிகள் என்பதனை தாம் புரிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் பொறிமுறைமையில் உழைக்கும் வர்க்கத்தினரின் பங்களிப்பு மிகவும் அவசியமானது எனவும் சுட்டிக்காட்டிய அவர் மக்களை மையப்படுத்திய கட்சியாக சுதந்திரக் கட்சி உருவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது காலாவதியான ஒரு பொருள் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தான் 2020 ஆம் ஆண்டில் ஓய்வுபெற மாட்டேன் என்றும் நாட்டிற்காக செய்ய வேண்டிய கடமைகள் இன்னும் அதிகமாக உள்ளதாகவும் ஜனாதிபதி மட்டக்களப்பில் நடைபெற்ற மே தின கூட்டத்தின் போது தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓய்வுபெற பெறத்தேவையில்லை, அவரை இப்போதைக்கும் நாட்டு மக்கள் ஓய்வுக்கு அனுப்பிட்டார்கள் என்றும் ஜனாதிபதி இப்போது காலாவதியான ஒரு பொருள் என்றும் தெரிவித்தார்.