சிரியாவின் பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல் ராணுவத்தை அச்சுறுத்த ஈரான் படைகளை அனுமதித்தால் சிரியா ஜனாதிபதி பஷார் அல்-அசாத்துக்கும் அவரது ஆட்சிக்கும் அது முடிவாக இருக்கும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யுவல் ஸ்டீனிட்ஸ் (Yuval Steinitz) எச்சரிக்கை விடுத்துள்ளார்
ஈரான் அல்லது அதன் சார்பிலான படைகளின் ஏவுகணைத் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராகிவருவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அண்மையில் சிரியாவில் உள்ள தமது ராணுவத் தளங்களின் மீது, இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படும் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பழிவாங்கப் போவதாக ஈரான் தெரிவித்திருந்தது.
இந்தநிலையிலேயே சிரியாவில் இருந்து தாக்குதல் நடத்த ஈரானால் முடியும் என்றால், அது அசாத் மற்றும் அவரது அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் என ஸ்டீனிட்ஸ் தெரிவித்துள்ளார். சிரியா உள்நாட்டுப் போரில் ஜனாதிபதி அசாத்துக்கு ஆதரவளிக்கும் ஈரான், தனது படைகளையும், ஆதரவு குழுக்களையும் அங்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது