அதிகாரங்களை தக்கவைப்பதற்காக விலங்குகளுக்கு அப்பால் மனிதர்கள் செல்கின்றனர்.. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
போர் நடைபெற்ற காலத்தில் அதிகளவில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய புலனாய்வு பிரிவுகளை சேர்ந்த சகல தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இவர்கள் வெளியில் வர வேண்டுமாயின் கோத்தபாய ராஜபக்சவின் பெயரை கூறினால் போதும் எனவும் ஆனால் படை வீரர்கள் பொய்களை கூறி உயிர்களை பாதுகாத்துக்கொள்ளும் நபர்கள் அல்ல என்பதால், அவர்களிடம் இருந்து அந்த வார்த்தையை பெற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நூல் வெளியிட்டு நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். விலங்கு உலகில் வாழும் விலங்குகள் தாம் வாழ்வதற்காக பெரிய போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இந்த விலங்குகளில் வலுவான, வஞ்சகமான மற்றும் சிறிய விலங்குகளும் உள்ளன. விலங்குகளின் தாக்குதல் முறைகளை மனிதர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
மறைந்திருந்து தாக்குவதே இராணுவத்தில் காணப்படும் பிரதானமான போர் முறை. சூழலுக்கு ஏற்ற வகையில் ஆடைகளை அணிந்து எதிரியின் கண்ணுக்கு தெரியாமல் எதிரியை சிக்க வைப்பார்கள். இந்த முறை விலங்குகளின் தாக்குதல் பொறிமுறை. மனிதர்கள் மனிதர்களை கொன்று புசித்து வாழ்வதில்லை. இதன் காரணமாகவே அவர்களை மனிதன் என்கின்றனர். எனினும் தற்போது மனிதர்கள் தமது தனிப்பட்ட நலன்கள், அதிகாரங்களை தக்கவைப்பதற்காக விலங்குகளுக்கு அப்பால் சென்று பொய்களை பயன்படுத்தி வருகின்றனர். கொலை செய்ய முடியாது என்பதால், அவப்பெயரை ஏற்படுத்தி அதிகாரத்தை பாதுகாத்து கொள்ள முயற்சித்து வருகின்றனர் எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.