குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முசலி பிரதேசச் செயலாளர் பிவுக்குட்பட்ட கொக்குப்படையான் கிராம மக்களுக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கர் விவசாய காணியில் அரபு நாட்டின் நிதி உதவியுடன் வேறு கிராம சேவகர் பிரிவுக்குற்பட்ட மக்களை குடியேற்றம் செய்ய மேற்கொள்ளப்பட நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை இவ்வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றுள்ள நிலையில் குறித்த வீட்டுத்திட்டத்தை உடன் நிறுத்தி குறித்த காணியை கொக்குப்படையான் கிராம மக்களுக்கு பெற்றுத்தரக் கோரி கொக்குப்படையான் கிராம மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை(8) காலை முசலி பிரதேசச் செயலகத்திற்கு சென்று மகஜர் கையளித்துள்ளனர்.
-குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,
முசலி பிரதேசச் செயலாளர் பிவுக்குற்பட்ட கொக்குப்படையான் கிராம மக்களுக்கு முசலி புதிய பேரூந்து தரிப்பிடத்திற்கு பின்னால் சுமார் 15 ஏக்கர் விவசாய காணி காணப்படுகின்றது. -குறித்த கிராம மக்கள் 1990 ஆம் ஆண்டு நாட்டில் இடம் பெற்ற யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து சென்று மீண்டும் 10 வருடங்களில் பின் குறித்த கிராமத்தில் குடியேறியுள்ளனர். இதன் போது அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சிலரது காணி உரிமங்கள் தவறவிடப்பட்ட போதும்,பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் காணி ஆவணங்கள் வழங்கப்பட்டது. குறித்த காணியில் கொக்குப்படையான் கிராம மக்கள் விவசாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
-இந்த நிலையில் குறித்த காணியில் அரபு நாட்டின் நிதி உதவியுடன் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வேறு கிராம அலுவலகர் பிரிவில் வசித்து வரும் மக்களை மீள் குடியேற்றும் வகையில் கொக்குப்படையான் கிராம மக்களுக்குக்ச் சொந்தமான குறித்த விவசாய காணியில் சுமர் 45 வீடுகளைக் கொண்ட வீட்டுத்திட்டம் ஒன்றை அமைப்பதற்கு கடந்த 5 ஆம் திகதி சனிக்கிழமை எல்லையிடப்பட்டு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற்றுள்ளளதாக அந்த மக்கள் விசனம் தெரிவித்தனர்.
இந்த நிலையிலே கொக்குப்படையான் கிராம மக்கள் குறித்த சம்பவத்தை கண்டித்தும்,தமது காணியை தமக்கே பெற்றுத்தர கோரியும் இன்று செவ்வாய்க்கிழமை(8) காலை 11 மணியளவில் அருட்தந்தை தவராஜா அடிகளார் தலைமையில் முசலி பிரதேசச் செயலகத்திற்கு சென்று முசலி பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமாரை சந்தித்து உரையாடி மகஜர் கையளித்தனர்.
இதன் போது கொக்குப்படையான் கிராம மக்களுக்கு ஆதரவாக மன்னார் நகரசபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,உப தலைவர்,உறுப்பினர்கள் சென்றிருந்ததோடு,முசலி பிரதேச சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களும் கலந்து கொண்டிருநத்னர். மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் காணி அலுவலகர்களை அழைத்துக்கொண்டு, வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்ட காணிப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர்.
தன்னிடம் எவ்வித அனுமதியும் இன்றி குறித்த காணியில் வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதேசச் செயலாளர் உடனயடியாக குறித்த காணிகளில் இடம் பெறவுள்ள வேலைத்திட்டங்களை நிறுத்த உத்தரவிட்டார்.
மேலும் காணிக்கூறிய ஆவணங்கள் உள்ளவர்களுக்கு காணியினை நீதியான முறையில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.