வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்திய சாலைகளிலும் (யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை நீங்கலாக) அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் 24 மணி நேரஅடையாள வேலை நிறுத்தம் ஒன்றை எதிர்வரும் திங்கட்கிழமை 14.05.18-அன்று காலை 8 மணி முதல் மேற்கொள்ள உள்ளது. அரச மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய மேலதிக கொடுப்பனவுகள் ( புதிய சுற்று நிருபத்தின் படி) கடந்த நான்கு மாதங்களாக வழங்கப்படவில்லை.
இது சம்பந்தமாக அரச மருத்துவ அதிகாரிகள் தாய்ச் சங்கம் இரண்டு மாதங்கள் முன்பு வட மாகாண சுகாதார அதிகாரிகளினை இதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரியிருந்தது. இதற்கு பலன் ஏதும் கிடைக்காதவிடத்தில் வட மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வட மாகாண சுகாதார அமைச்சர்,மற்றும் வட மாகாண சுகாதார பணிப்பாளர் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதற்கு அவர்கள் சிறிது காலத்தில் மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இலங்கையில் அனைத்து மாகாணஙகளிலும் (கிழக்கு மாகாண உட்பட) வைத்தியர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் போது வட மாகாண சுகாதார அமைச்சு அதிகாரிகளின் அசமந்த போக்கு காரணமாக நாங்கள் இந்த பணி புறக்கணிப்புக்கு தள்ளப்பட்டு உள்ளோம்.
வட மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் 10ம் திகதி வரை வழங்கிய கால அவகாசம் முடிவடைவதனால் எதுவித நடவடிக்கை எடுக்கப்படாதவிடத்தில் திட்டமிட்டபடி பணி புறக்கணிப்பு எதிர்வரும் 14.05.2018 திங்கட்கிழமை காலை 8 மணி முதல் நடைபெறும். இதனால் நோயாளிகளிற்கு ஏற்படும் சிரமங்களிற்கு சுகாதார அமைச்சு பொறுப்பு ஏற்க வேண்டும். பணிப் புறக்கணிப்பு அன்று அவசர சிகிச்சை அனைத்து வைத்திய சாலைகளிலும் வழங்கப்படும். எமது பணிப் புறக்கணிப்பு உரிய பதில் வழங்கப்படாவிடுத்து எமது போராட்டம் மேலும் எதிர்வரும் காலங்களில் விஸ்தரிக்கப்படும்.
வைத்திய கலாநிதி த.காண்டீபன்
இனணப்பாளர்
வட மாகாணம்
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்.