‘இருட்டு அறையில்..’. என்று ஆரம்பிக்கும் திரைப்படம் ஒன்று கடும் எதிர்ப்பை பெற்று வருகிறது. ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் இந்தப் படம் திரையரங்குகளில் ஓடக்கூடாது என்றும் பலத்த எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.
இயக்குனர் பாரதிராஜா இப்படத்தை தாக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதன்போது இப்படம் தமிழ் திரையுலகத்தை வெட்கி தலைகுனிய வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். இதேவேளை ஒளிப்பதிவாளர் மற்றும் கோலி சோடா’, ‘கடுகு’ படங்களை இயக்கியவருமான விஜய் மில்டன், ‘அந்தப் படம் ஓடக்கூடாது என்று கூறியுள்ளார்.
இது குறித்து விஜய் மில்டன் கூறியதாவது,
அதில், அந்தப் படத்தின் முன்னோட்ட காட்சியை பார்க்கும் போதே, இந்தப் படம் ஓடக்கூடாது என்று நினைத்தேன். திரைத்துறையில் இருந்துக் கொண்டே, இந்தப் படம் ஓடக்கூடாது என்று சொல்லும் போது எனக்கே ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஒரு படம் ஓடினால் தான் திரைத்துறைக்கு நல்லது. வேற யாராவது தயாரித்திருந்தால் எதுவும் தெரிந்திருக்காது. மிகவும் மதிக்கக் கூடியவரே இந்த படத்தை தயாரித்திருப்பது, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. அவர்கள் சொல்லித்தான் ‘ஏ’ படம் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் தரப்பில் தப்பில்லை.
ஆனால், இந்தப்படம் ஓடக்கூடாது என்று எனக்கு ஏன் தோன்றியது என்றால், திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்று பலர் வருகிறார்கள். இந்தப் படம் ஓடியது என்றால், இளைஞர்களுக்கு இதுதான் பிடிக்கும் போல, இதுதான் சினிமா என்று நினைத்துக் கொண்டு எல்லாரும் இதுபோன்ற படங்கள் எடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த கால கட்டத்திற்கு இது சரிபட்டு வராது. ஏதோ பேசனும்னு தோன்றியது, பேசாமல் இருந்தால் தப்பு என்று தோன்றியது. அதான் பேசிவிட்டேன். இதனால் வரும் எதிர்வினையை சந்திக்கவும் தயார்’ என்றார்.
இந்த திரைப்படம் குறித்து இயக்குனர் பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில் “திரைப்படங்களால் தேசத்தையே கைக்குள் கொண்டுவர முடியும் என்று சொன்னார்கள். சமீபகாலமாக, சில தரம்கெட்ட திரைப்படங்களால் நம் தமிழ்நாடு தரமிழந்து கிடக்கிறது. இலக்கியம், இதிகாசம், சராசரி மனித வாழ்க்கையைக் கொண்டாடிய நம் திரைப்படங்கள், இன்று சதையை மட்டுமே கொண்டாடுகின்றன.
சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படங்கள், இன்று இரட்டை அர்த்த வசனங்களால் மலிந்துபோய்க் கிடக்கின்றன. கொண்டாட வேண்டிய திரைப்படங்கள், இன்று கொள்கையற்றுக் கிடக்கின்றன. இலைமறை காயாக சொல்லப்பட்ட விஷயங்களை, இன்று இலைபோட்டுப் பரிமாறுகிறார்கள். தாழ்ந்த உருவாக்கங்களால் தலைகுனிகிறது நம் திரைப்படத்துறை. இந்த மாதிரியான படங்கள் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும். இந்த மாதிரியான படங்கள் வெளியாவதற்கு தயாரிப்பாளர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளும் காரணம் என தெரிவித்திருந்தார்.
ஆபாசத் திரைப்படங்களைப் படைக்கும் படைப்பாளர்களே… நீங்கள் எடுக்கும் திரைப்படங்களை, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து பார்க்க முடியுமா? சற்று சிந்திப்பீர். பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. அதற்கு திரை ஊடகத்தைத் தவறாகப் பயன்படுத்தாதீர்கள். திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல… அது எழுதப்பட்ட வாழ்க்கை என்பதை உணருங்கள். மத்திய தணிக்கைக்குழு அதிகாரிகளே… இரண்டாம் தரமான படைப்புகளை மறு பரிசீலனை செய்யுங்கள். இல்லையென்றால், சென்சாரையே சென்சார் செய்யவேண்டிய நிலை ஏற்படும்” என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.