தமிழில் குளோபல் தமிழ்ச்செய்திகள்
பொதுவாக கோப்பி அருந்துவது உடலுக்கு தீங்கு என்றே அநேக ஆய்வுகள் முடிவுகள் குறிப்பிடுகின்றன. எனினும், இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஆய்வு முடிவொன்றினை அமெரிக்க புற்று நோய் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். கோப்பி அருந்துவதனால் புற்று நோயைத் தடுக்க முடியும் என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஆண்களுக்கு ஏற்படக் கூடிய சுக்கிலவக புற்று நோயைக் கட்டுப்படு;த்தும் சக்தி கோப்பிக்கு இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.50000 அமெரிக்க ஆண்களிடம் நடத்திய ஆய்வின் பின்னர் இந்த புதிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட கோப்பை கோப்பியை பருகுவோருக்கு சுக்கிலவக புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் 20 வீதத்தினால் குறைவடைகின்றது. ஆண்களை அதிகமாகத் தாக்கும் புற்று நோய் வகைகளில் சுக்கிலவக புற்று நோய் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும் தேசிய புற்று நோய் நிறுவகத்தின் மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவு தெளிவற்ற தன்மையுடன் காணப்படுவதாக மற்றுமோரு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
புற்று நோயைத் தடுப்பதற்காக கோப்பி பருகுவதனை ஏற்றுக் கொள்ள முடியாது என அந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
1986ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையில் 48000 அமெரிக்கர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கோப்பியில் காணப்படும் எந்த பதார்த்தம் புற்று நோயைக் கட்டுப்படுத்துகின்றது என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை. எனினும், கோப்பியில் காணப்படும் ஏதோவொரு பதார்த்தம் சுக்கிலவக புற்று நோயைக் கட்டுப்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுக்கிலவக புற்று நோய்க்கும் கோப்பிக்கும் இடையிலான தொடர்பு குறித்து விரிவான ஆய்வு நடத்தப்படும் என ஹவார்ட் பொது மருத்துவக் கல்லூரியின் பிரதான ஆய்வாளர் டொக்டர் கேத்ரின் வில்ன் தெரிவித்துள்ளார். இதேவேளை, அதிகளவு கோப்பியைப் பருகுவதனால் வேறும் உடல் உபாதைகள் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.