குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
யாழ்.சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல் நடத்தினார் என கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சிறைச்சாலைக்குள் வைத்து சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் தாக்கினார்கள் என சந்தேக நபர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தார்.
சிறைச்சாலை வாகனம் மீதும் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றைய தினம் யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சின்னத்துரை சதிஸ்தரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது சந்தேக நபர் மன்றில் முன்னிளையானர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் விண்ணப்பம் செய்கையில் ,
“சந்தேகநபரை சிறை அலுவலர்களும் தாக்கியமைக்கான ஆதாரம் ரெஸ்ரோரண்டில் பொருத்தப்பட்ட சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தது. தாமும் கைகலப்பில் ஈடுபட்டமைக்கான ஆதாரம் அதில் உள்ளதை சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் அறிந்து, சந்தேகநபரை சிறைச்சாலைக்குள் வைத்து தாக்கியுள்ளனர். இந்த விடயத்தை எவரிடமும் தெரிவிக்க வேண்டாம் எனவும் சிறை அலுவலர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
சிறைச்சாலைக்குள் சந்தேகநபர் கொண்டு செல்ல முன்னர் அவரை பரிசோதித்து வழங்கிய மருத்துவச் சான்றிதழில் அவரது உடலில் காயங்கள் உள்ளமை தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை.
சிறைச்சாலைக்குள் இருந்த போது பரிசோதிக்கப்பட்டு வழங்கப்பட்ட மருத்துவச் சான்றிதழில் சந்தேகநபரின் கண் புருவம் உள்ளிட்ட பகுதிகளில் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சிசிரிவி கமரா பதிவைப் பெற்று இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று சந்தளநபரின் சட்டத்தரணி மன்றில் சமர்ப்பணம் செய்தார்.
அதனை ஆராய்ந்த நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், “ரெஸ்ரோரண்டின் சிசிரிவி பதிவு மன்றில் சமர்ப்பிக்கப்படவேண்டும். அந்தப் பதிவில் உள்ளவாறு தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மன்றில் முற்படுத்தப்படவேண்டும்” என்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அத்துடன் “சிறைச்சாலைக்குள் தாக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர் பொலிஸில் முறைப்பாட்டை வழங்கவேண்டும். அது தொடர்பில் சந்தேகநபரிடம் பொலிஸார் வாக்குமூலத்தைப் பெறவேண்டும்” என்றும் நீதிவான் கட்டளையிட்டார். அதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.
வழக்கின் பின்னணி.
யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியிலுள்ள ரெஸ்ரோரன்டில் கடந்த 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் சிறைச்சாலை வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சிறைச்சாலை ஜெயிலர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். அதனால் வாகனம் மீது தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
அதன்பின்னர் சந்தேநபர் சார்பில் அவரது சட்டத்தரணி நகர்த்தல் பத்திரம் அணைத்தமைக்கமைவாக இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.
அதன் போது , “சந்தேகநபர் அன்றைய தினம் யாழ்ப்பாணம், கே.கே.எஸ் வீதியிலுள்ள ரெஸ்ரோரன்டில் மது அருந்திக்கொண்டிருந்தார்.எனவும் , அதன் போது அங்கு மது அருந்த வந்த யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மூவருக்கும் சந்தேகநபருக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. எனவும், அதன்போதே சிறைச்சாலை வாகனத்தின் கண்ணாடி உடைந்தது.எனவும் சந்தேகநபர் முறைப்பாட்டாளர்களின் பொறுப்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அதனால் அவருக்கு அச்சுறுத்தல் உண்டு. எனவே சந்தேநபரை பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று சந்தேகநபரின் சட்டத்தரணி அன்றைய தினம் மன்றில் சமர்ப்பணம் செய்தார்.
அதனை ஆராய்ந்த மேலதிக நீதிவான், முறைப்பாட்டாளரின் பாதுகாப்பில் சந்தேகநபரைத் தடுத்துவைப்பது அச்சுறுத்தலானது எனச் சுட்டிக்காட்டி அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டிருந்தார்.