குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாண நகரின் மத்தியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகம் இயங்கும் ஸ்ரீதர் தியேட்டர் கட்டடத்தின் உரித்தை மீளப் பெற்றுத் தருமாறு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு வரும் ஜூன் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படுகிறது.
இராட்ணசபாபதி ஸ்ரீதர் உள்ளிட்ட 6 பேர் மனுதாரர்களாகவும் ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவை எதிர்மனு தாரராகவும் குறிப்பிட்டு சட்டத்தரணி கேசவன் சயந்தன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
‘1996ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையைப் பயன்படுத்தி அனுமதி எதுவுமின்றி சட்டவிரோதமாக குடியேறிய முதலாவது எதிர்மனுதாரர், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை எதையுமே வழங்காமல் ஆதனத்தையும் கட்டடத்தையும் வைத்துள்ளார்.
இதன் காரணமாக உரிமையாளர்களாகிய எமக்கு மாதம் ஒன்றுக்கு 75 ஆயிரம் ரூபா வீதம் ஏற்பட்ட இழப்பும் அதன் வட்டியையும் இணைத்து இதுவரை காலத்துக்குமான இழப்பீடாக 100 மில்லியன் ரூபாவையும் எதிர் மனுதாரர் வழங்கவேண்டும். தற்போது இடம்பெறும் வழக்குச் செலவுடன் கட்டடத்துடன் கூடிய ஆதனத்தின் உரித்தையும் பெற்றுத் தரவேண்டும்’ என்று மனுதாரர்கள் கேட்டுள்ளனர்.
இந்த மனுவை வரும் ஜூன் 6ஆம் திகதி அழைக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்ற நீதிபதி வி.இராமகமலன் அனுமதியளித்துள்ளார்.