குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
‘ புகையிரதத்தில் மூன்றாம் வகுப்பு ஆசனத்துக்கு கட்டணம் செலுத்திவிட்டு இரண்டாம் வகுப்பு ஆசனத்தில் அமர்ந்திருந்ததாலேயே பெண் பயணியிடம் புகையிரத ஊழியர் முரண்பட்டார். அவர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற விடயம் தவறானாது – சோடிப்பு.அவ்வாறு ஒன்றுமே நடக்கவில்லை’ என புகையிரத ஊழியர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணியும் யாழ்.மாநகர சபை உறுப்பினருமான மு.றெமிடியஸ் மன்றில் சமர்ப்பணம் செய்தார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த தொடருந்தில் பயணித்த பிரிட்டன் வாழ் குடும்பப் பெண்ணுடன் தகாத முறையில் நடந்துகொண்ட புகையிரத ஊழியர், யாழ்ப்பாணம் காவல்துறையினரால் நேற்று மதியம் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைகளின் பின்னர், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டார்.
பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் புகையிரத ஊழியருக்கு எதிராக முதல் அறிக்கையை காவல்துறையினர் மன்றில் சமர்ப்பித்தனர். இதன்போதே சந்தேகநபரின் சட்டத்தரணி இந்த விடயத்தை மன்றில் தெரிவித்து, அவரைப் பிணையில் விடுவிக்க விண்ணப்பம் செய்தார். அதனை ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபா ஆள் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.