பாரதீய ஜனதா மற்றும் இந்து அமைப்புகளுக்கு எதிராகத் தொடர்ந்து பேசி பிரசாரம் செய்து வருவதால், தன்னை கொல்ல சதி நடப்பதாக நடிகர் பிரகாஷ் ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் கடந்த சில மாதங்களாக பாஜக மற்றும் இந்து அமைப்புகளுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். பெங்களூரில் எழுத்தாளர் கெளரி லங்கேஷ் மற்றும் கல்புர்கி ஆகியோர் இந்து அமைப்புகளுக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்ததால், கொலை செய்யப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டிவருகிறார்.
இந்நிலையில், பெங்களூரில் பிரகாஷ்ராஜ் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அதன்போது, “நான் பாஜக மற்றும் இந்து அமைப்புகளுக்கு எதிராக இயங்கி வருவதால், என்னை கொல்ல சதி நடக்கிறது. சில இந்து அமைப்புகள் எனக்கு நேரடியாகவே கொலை மிரட்டல் விடுத்துள்ளன. இதனால், நான் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கொலை செய்யப்படலாம். ஆனால், நான் அதற்கு அஞ்சவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரகாஸ்ராஜ், பிரதமர் மோடிக்கு நாட்டை சரியாக ஆட்சி செய்யத் தெரியவில்லை. நாட்டில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தி அதன் மூலம் ஆதாயத்தை தேட நினைக்கிறார்கள். இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மதவாத கட்சிகளுக்கும், வன்முறையைத் தூண்டும் கட்சிகளுக்கும் வாக்களிக்காமல், மக்கள் ஆராய்ந்து பார்த்து வாக்களிக்க வேண்டும் என வேண்டுகொள் விடுத்துள்ளார்.