குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வட மாகாணசபைக்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் எதிர்வரும் திங்களன்று அடையாளப் பணிப் பகிஸ்கரிப்புக்கு தயாராகி வருகின்றனர் ,இவ் விடயம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ஞா .குணசீலன் தெரிவிக்கையில் மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை வழங்காத நிலையில் தம்மால் அவற்றை வழங்க முடியவில்லை எனவும் அதை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க பிரதிநிதியிடம் வினவிய போது
வடமாகாண சபை அதிகாரிகளின் குறிப்பாக பிரதம செயலாளர் திரு. பத்திநாதர் மற்றும் பிரதி பிரதம செயலாளர்(நிதி ) திரு.சந்திரகுமார் ஆகியோரின் வினைத்திறன் அற்ற செயட்பாட்டினாலேயே இந்நிலை தோன்றியுள்ளது எனவும் ஏனைய மாகாண சபைகள் அனைத்தும் இக்கொடுப்பனவுகளை வழங்கிய நிலையில் வடமாகாண சபை மட்டுமே இவ்வாறு வங்குரோத்து நிலையில் இருக்குமாயின் அதட்குரிய முழுப் பொறுப்பையும் அதன் வினைத்திறனற்ற அதிகாரிகளே பொறுப்பெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நிதியை சரியான நேரத்தில் பெற்று வழங்க வேண்டிய உயர் அதிகாரிகள் அதனை செய்வதை விடுத்து மத்திய அரசை குற்றம் சொல்லி காலத்தை வீணடிப்பதில் பலனில்லை. இருக்கிற நிதியை சரிவர நிர்வகிக்க தெரியாதவர்கள் நொண்டிச்சாட்டு சொல்லுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தமக்குரிய பணிகளை சரிவரச் செய்ய தெரியாதவர்கள் அதிலிருந்து விலகுவதே மக்களுக்கு செய்யும் பெரிய சேவை ஆகும் எனத் தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில் அத்தியாவசிய சேவையான சுகாதார சேவைகளையே நடாத்திச் செல்ல முடியாத நிலையில் அதன் அதிகாரிகளின்செயட்பாடுகள் அமைந்திருக்கையில் வடமாகாண அரசியல் வாதிகளோ போலீஸ் சேவை போன்ற சேவைகளையும் தம்மிடம் வழங்குமாறு கோரி நிற்பது நகைப்புக்கிடமாகவே உள்ளது எனவும் குறிப்பிட்டனர்.
மேலும் தமது பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக பாதிப்புக்கு உள்ளாகும் நோயாளர்களிடம் தாம் மன்னிப்பு கோருவதாகவும் அவசர சேவைகளை எப்போதும்போல வழங்குவதட்க்கு தமது உறுப்பினர்கள் எப்போதுமே தயாராக உள்ளார்கள் எனவும் அரசமருத்துவ அதிகாரிகள் சங்க மத்தியகுழு குழு உறுப்பினரும் வடமாகாண இணைப்பாளருமாகிய வைத்தியர் தங்கராஜா காண்டீபன் தெரிவித்தார்