பெருநகர, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நகர புனர்வாழ்வு பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘வீட்டுக்குப் பதிலாக வாழ்க்கை’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்தில் குறைந்த வசதிகளையுடைய மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தின் கீழ் 430 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ; இன்று (10) முற்பகல் தெமட்டகொட ‘சியபத் செவன’ புதிய வீட்டுத்தொகுதியில் இடம்பெற்றது.
கொழும்பு நகர் எங்கிலும் உள்ள தோட்ட வீடுகளில் உள்ள குறைந்த வசதிகளையுடைய சுமார் 50,000 குடும்பங்களை நவீன வசதிகளுடன் கூடிய மாடி வீடுகளில் குடியமர்த்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீட்டுத்திட்டத்திற்கு 1,748 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2016, 2017ஆம் ஆண்டுகளில் 7,496 மில்லியன் ரூபா முதலீட்டில் 1,874 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டன. 2018ஆம் ஆண்டு மே மாதம் நிறைவடைகின்றபோது 5,756 மில்லியன் ரூபா முதலீட்டில் மேலும் 1,439 வீடுகள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
2020க்கு முன்னர் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கும் நோக்கில் 42,330 மில்லியன் ரூபா முதலீட்டில் 9,100 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹேணமுல்ல, தெமட்டகொட, அங்கொட, மட்டக்குளிய, மாளிகாவத்தை, கொலன்னாவ, புளுமென்டல் ஆகிய பகுதிகளில் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.