இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின் முன்மொழிவு திருப்தியாக இல்லை. அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி ஒரு வார்த்தை கூட பேசாதது கவலையையும் ஏமாற்றத்தையும் தருகிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இன்று (10) 8ஆவது பாராளுமன்றத்தில் 2ஆவது கூட்டத்தொடரின் தேசிய அரசாங்கத்தின் கொள்கை விளக்கம் மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது,
தேசிய அரசாங்கத்தின் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி ஆற்றிய உரையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அடிப்படை தெரியாமல், சரியான அணுகுமுறை இல்லாமல் நழுவல்போக்கில் இருந்ததா என்ற கேள்வி குழுக்களின் தவிசாளரினால் எழுப்பப்பட்டிருந்தது. இதை நான் ஆமோதிக்கிறேன். அதேநேரம், ஜனாதிபதியின் உரையின் ஒருசில இடங்களில் மாத்திரம்தான் சிறுபான்மை பற்றி பேசப்படுகிறது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் உண்மையான மக்கள் நேய செயற்திட்டத்தில் 15 விடயங்களை அடையாளம்கண்டு குறிப்பிட்டிருந்தார்.
இதில் 7ஆவது அம்சமாக தமிழ் மக்களின் சமஉரிமைகளை அடிப்படையாகக்கொண்ட அபிலாஷைகளை ஏற்றுக்கொள்ளல் என்றும் முஸ்லிம் மக்களின் நலன் மற்றும் சமூக, கலாசார தேவைகளை உறுதிசெய்தல் என்றும் மலையக தமிழ் மக்களின் பொருளாதார, சமூக நிலையை மேம்படுத்தல் போன்றவற்றைத் தவிர வேறெதும் இனப்பிரச்சினைக்கான தீர்வாக ஜனாதிபதியினால் முன்மொழியப்படவில்லை.
பேசுபொருளாக மாத்திரம் இருக்கின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில், பிரதமர் தலைமையிலான வழிநடத்தில் குழுவில் நாங்கள் சுமார் 77 தடவைகள் சந்தித்து கலந்துரையாடியிருக்கிறோம். இது சம்பந்தமான இடைக்கால அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கிறோம். இந்த அறிக்கையில் கையாளப்பட்ட விடயங்கள் தொடர்பாக பாராளுமன்றில் விவாதிப்பதற்கு நேரம் ஒதுக்காமல் தடுமாறிக்கொண்டிருக்கிறோம்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அதன் எதிர்கால திட்டங்கள் என்னவென்று தெரியாமல் இன்னும் கேள்விக்குறியாகவே இருந்துகொண்டிருக்கிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் தற்போதைய ஜனாதிபதியை ஆசனத்தில் அமர்த்தியிருக்கின்ற நிலையில், இன்று கட்டம் கட்டமாக அரசியல் யாப்பை திருத்திக்கொண்டிருக்கின்ற ஒரு நிலைமைக்கு போய்க்கொண்டிருக்கிறோமா என்ற கேள்வியை நாங்கள் கேட்கிறோம்.
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை மாத்திரம் மாற்றுவதற்கு சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு ஜே.வி.பி. முயற்சித்துக்கொண்டிருப்பதாக கேள்விப்படுகிறோம். இந்நிலையில், சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் சிலர் சேர்ந்து அரசியல் யாப்பு முழுமையாக திருத்தப்படவேண்டும். தேவைக்கு மாத்திரம் கட்டம் கட்டமாக திருத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம்.
சிறுபான்மை சமூகங்களின் அபிலாஷைகள் என்ற விடயத்தில், வெறும் அபிலாஷைகள் என்று மாத்திரம் அடையாளப்படுத்தி ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில் சொல்வது திருப்தியடைகின்ற விடயமாக இருக்கமாட்டாது. இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு வழியாக 13ஆவது சட்ட திருத்தத்திலுள்ள எல்லா அம்சங்களையும் மீளாய்வு செய்யவேண்டும்.
அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதியின் கொள்கை விளக்க பேருரையில் இதைப்பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. இது கவலையைத் தருகின்ற விடயம் மாத்திரமல்ல ஏமாற்றத்தையும் தருகின்றது. இந்த தீர்வுக்கான நிரந்த வழியை அரசாங்கம் மிக விரைவில் சொல்லியாகவேண்டும்.
சில பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாத நிலையில் சிறுபான்மையினர் சில விட்டுக்கொடுப்புகளை செய்திருக்கிறோம். சிலவற்றுக்கு மாற்றுத்தீர்வுகளை சிபார்சு செய்திருக்கிறோம். ஆனால், நாட்டிலுள்ள பெரும்பான்மை சமூகத்துக்கு மத்தியில் சந்தைப்படுத்த முடியாது என்ற பயத்துக்காக மாத்திரம் இந்த விடயங்களுக்கு தீர்வில்லாமல், தொடர்ந்து இழுத்தடித்துக்கெண்டிருக்கின்ற பாராளுமன்றமாக இது இருக்கமுடியாது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு விவகாரத்தை இன்னும் இழுத்தடித்துக்கொண்டிருக்க முடியாது. அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் இனப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருவார் என்ற வாக்குறுதியில் இனி மக்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
மக்களிடமிருந்து பறிபோன நிலங்களில் 85 சதவீதமானவற்றை திருப்பிக்கொடுத்துள்ளதாக ஜனாதிபதி சொல்கிறார். இந்த சதவீதத்தை சிறுபான்மையினர் ஏற்றுக்கொள்ளலமா என்ற கேள்வியும் இருக்கிறது. இதன் உண்மைத்தன்மையில் பிரச்சினை இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டவேண்டும்.
கிழக்கிலும் வடக்கிலும் தமிழ் மக்கள் மாத்திரமல்ல முஸ்லிம்களும் ஏராளமான காணிகளை இழந்துள்ளனர். பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவந்த காணிகளை வன இலாகாக்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால், மூவாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் ஜீவனோபாயத்தை இழந்து நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
யுத்தம், பயங்கரவாதம், இராணுவ நடவடிக்கை போன்வற்றினால் மாத்திரமல்ல அரச செயற்பாடுகளினால் வலுக்கட்டாயமாக மக்களின் வாழ்வாதார காணிகள் பல இடங்களில் பறிபோயுள்ளன. இதில் தமிழ் – முஸ்லிம் மக்களுக்கிடையில் வட்டமடு போன்ற காணிப்பிரச்சினைகளும் இருக்கின்றன. சிறுபான்மை சமூகங்களாகிய நாங்கள் எங்களுக்குள் உடன்பாட்டை காணவேண்டும். கொண்டுவட்டுவான் பிரதேசத்தில் விவசாயம் செய்யப்போன மக்கள் விரட்டியடிக்கப்பட்டதால் ஏற்பட்ட மோசமான நிலவரங்களை கண்டோம்.
தோப்பூரில் பத்து வீட்டத்திட்டம் இருந்த இடத்தில் இராணுவத்தினர் நிரந்தரமாக முகாம் அமைத்து தங்கியிருக்கின்றனர். தற்காலி முகாம் இன்று நிரந்தர முகாமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வீடுகளின் உரிமையாளர்கள் பல தடவைகள் எங்களிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், முகாமை அங்கிருந்து அகற்றுமாறு இராணுவ அதிகாரிகளிடம் பேசிவருகிறோம். ஆனால், அதற்கான தீர்வு இன்னும் வழங்கப்படவில்லை.
பல இடங்களில் ஹோட்டல்களை அமைக்கப்பட்டு, கடல் தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லமுடியாதவாறு வேலி போடப்பட்டுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் தீர்வுகாணப்பட்டு மக்களின் வாழ்வாதார இடங்களை மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கின்ற நிலைமை ஏற்படவேண்டும்.
கண்டி மற்றும் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் காரணமாக, நாட்டின் சட்டம், ஒழுங்கு விடயத்தில் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது. இன்னொரு சமயத்தை, சமூகத்தை இழித்துப்பேசி வன்முறையை தூண்டுகின்ற வெறுப்பு பேச்சுகளை கட்டுப்படுத்தவேண்டும். இதற்கு தீர்வுகாணும் நோக்கில் வெறுப்பு பேச்சை தண்டனைக் கோவையின் ஒரு சட்டமாக மாற்றுவதில் நாங்கள் இன்னும் இழுத்தடிப்புச் செய்யமுடியாது.
கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டயீடு வழங்குகின்ற விடயத்தில், 85க்கு மேற்பட்ட கோவைகளுக்கு உரிய ஆதாரங்கள் இல்லாமையினால் நஷ்டயீடு வழங்க முடியாமல் இருப்பதாக மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சு கூறுகின்றது. திடீரென முழுமையாக தீக்கிரையாக்கப்பட்ட உடைமைக்குள் என்ன இருந்தது என்பதை ஒப்புவிக்க முடியாமல் அதன் உரிமையாளர்கள் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்.
அம்பாறை மற்றும் கண்டியில் வர்த்தக நிறுவனங்கள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அடையாளத்துக்காக ஒரு இலட்சம், ஐந்து இலட்சம் ரூபா கொடுப்பதன் மூலம் இவற்றுக்கு தீர்வுகாண முடியாது. எரிந்து தீக்கிரையாக்கப்பட்ட பள்ளிவாசல், வர்த்தக நிலையங்கள், வீடுகளுக்கு முழுமையான நஷ்டயீட்டை அரசாங்க வழங்கவேண்டும் என்றார்.
ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்