குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கட்டுப்படுத்த மதுபான சாலைகளுக்கு அருகில் போக்குவரத்து காவற்துறையினர் கடமையில் ஈடுபட வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். வீதி விபத்துக்கள் அதிகளவில் தற்போது ஏற்பட்டு உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. அவற்றுக்கு பிரதான காரணம் மது போதையில் வாகனம் செலுத்துவதாகும்.
மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதன் ஊடாக அவற்றை கட்டுப்படுத்த முடியும். அதற்கு காவற்துறையினர் மதுபான சாலைகளுக்கு அருகில் கடமையில் ஈடுபட வேண்டும்.
ஆனால் காவற்துறையினர் அவ்வாறு கடமையில் ஈடுபடுவதில்லை. அதற்கு காரணம் குறித்த மதுபான சாலை உரிமையாளர்களிடம் பொலிசார் கையூட்டு வாங்குகின்றமையே என எனக்கு சிலர் அறிய தந்துள்ளார்கள். எனவே அவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.