குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காலி கராபிட்டிய வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொண்டிருந்த வேளையில் மருத்துவர் ஒருவர் விபத்துக்குள்ளாகி அவருக்கும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட விசித்திரமான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நோயாளிக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்ட மேசை உடைந்து வீழ்ந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் விபத்துக்கு உள்ளான மருத்துவருக்கு ஒன்றரை மணித்தியால சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கராபிட்டிய வைத்தியசாலையின் விசேட நிபுணத்துவ மருத்துவர் ரஜித் அபேவிக்ரமவே சம்பவத்தில் காயமடைந்திருந்தார்.
வயிற்றில் புற்று நோய் கட்டியொன்றுடனான நோயாளி ஒருவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட வேளையில், சத்திரசிகிச்சையின் இறுதித் தருவாயில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நோயாளி படுக்க வைத்து சத்திரசிகிச்சை செய்யப்பட்ட மேசை திடீரென உடைந்து , மருத்துவரின் காலில் வீழ்ந்துள்ளது.சத்திரசிகிச்சையின் இறுதிக் கட்டம் என்பதனால் நோயாளிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், ஏனைய மருத்துவர்கள் சத்திரசிகிச்சையை பூர்த்தி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் ஒரு தொன் எடையுடைய மேசை தமது காலில் வீழ்ந்ததாகவும் விரல் ஒன்றுக்கு கடும் காயம் ஏற்பட்டதாகவும் மருத்துவர் ரஜித் தெரிவித்துள்ளார்.சத்திரசிகிச்சை அறை என்பது விமானமொன்றின் விமானியினது அறையைப் போன்றது பாதுகாப்பு மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இந்த சம்பவம் சிறு சம்பவம் ஒன்று வைத்தியரின் காலில் சிறு காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஜயம்பதி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.