குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
எரிபொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதன் எதிரொலி பல்வேறு விடயங்களில் தாக்கத்தை செலுத்தியுள்ளது. நேற்றைய தினம் எரிபொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. எரிபொருளுக்கான விலைப் பொறிமுறைமைக்கு அமைய பெற்றோலின் விலை 20 ரூபாவினாலும், டீசலின் விலை 14 ரூபாவினாலும், மண்ணெண்ணையின் விலை 57 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றமானது பல்வேறு விடயங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கத்தை செலுத்தும் என்பதில் ஐயமில்லை.
அந்த வகையில் பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் ஆலோசனை நடத்த உள்ளது. பேருந்து கட்டணங்களை உயர்த்துவது தொடர்பில் இன்றைய தினம் விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் பேருந்து கட்டண மீளாய்வு செய்யப்பட உள்ள நிலையில், அண்மைய எரிபொருள் விலையேற்றத்தின் அடிப்படையிலும் கட்டண மாற்றங்களைச் செய்ய முயற்சிக்கப்படுகின்றது.
அதேவேளை முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ஆகக் குறைந்த கட்டணமாக அல்லது தொடக்க கட்டணமாக இதுவரையில் 50 ரூபா அறவீடு செய்யப்பட்டு வந்த நிலையில் இந்தத் தொகை 10 ரூபாவினால் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அநேகமான பண்டங்களின் விலைகளும் சேவைகளின் கட்டணங்களும் உயர்த்தப்படக்கூடிய சாத்தியம் உண்டு என எதிர்வு கூறப்பட்டுள்ளது. போக்குவரத்து கட்டண அதிகரிப்பு ஏனைய அனைத்து துறைகளிலும் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இதேவேளை, ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவையும் எரிபொருள் விலை மீள் நிர்ணயம் செய்யப்படும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.