குளோபல் தமிழ்ச் செய்தியார்..
இலங்கை உள்ளூர் ஆளுகை நிறுவகம் – SLILG, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் -UNDP ஆகியவற்றின் அனுசரணையுடன், வடக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தினால் வடக்கில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிதாகத் தெரிவு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கருத்தமர்வுத் தொடரின் முதலாவது கருத்தமர்வு இன்று காலை யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விடுதியில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.
வடக்கு மாகாண முதலமைச்சரும், ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட இந் நிகழ்வில் வட மாகாண முதலமைச்சரின் அமைச்சுச் செயலாளர் தொடக்கக் கருத்துரையை வழங்கினார். தொடர்ந்து ” உள்ளூராட்சி மன்றங்களுக்கான சட்ட ஏற்பாடுகள்” என்ற தலைப்பில் ஆசிய நிறுவகத்தைச் சேர்ந்த எச். ஜி. சீ. ஜெயதிஸ்ஸவும், “பொதுக் கணக்காய்வு” என்ற தலைப்பில் வடமாகாண பிரதிக் கணக்காய்வாளர் நாயகம் ஜி. தேவஞானம், “உள்ளூராட்சி மன்றத் தீர்வை, நீதிமன்றத் தண்டப் பணம் தொடர்பான மாகாண திறைசேரியின் வகிபாகம்” என்ற தலைப்பில் வடமாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) எஸ்.யூ. சந்திரகுமார், “பெறுகை நடைமுறைகள்” என்ற தலைப்பில் வட மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல்) ஏந்திரி எஸ். சண்முகநாதன், “உள்ளகக் கணக்காய்வு” என்ற தலைப்பில் வட மாகாண பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திருமதி எஸ். சுரேஜினி ஆகியோர் வளவாளர்களாக் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர்.
இன்றைய நிகழ்வில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த யாழ். மாநகர சபை, நகர சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை – கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கருத்தமர்வு எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் கிரீன் கிறாஸ் விடுதியிலும், வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கருத்தமர்வு எதிர்வரும் 15 ஆம் திகதி வவுனியாவிலுள்ள ஓவியா விடுதியிலும் நடைபெறவுள்ளது என்று வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் தெரிவித்தார்.