தமிழில் -குளோபல் தமிழ்ச் செய்திகள்…
விண்வெளியில் மருந்துப் பொருட்களிலிருந்து எதிர்பார்த்தளவு நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். விண் வெளி வீரர்கள் வலி நிவாரணிகளை உட்கொண்டால் எதிர்பார்த்தளவு பலன் கிடைப்பதில்லை என தெரிவிக்கப்படுகிறது. நீண்ட காலமாக விண்வெளியில் தஙகியிருந்து ஆய்வு நடத்துவோருக்கு இந்த நிலைமை பாரிய பிரச்சினையை தோற்றுவிக்கக் கூடுமென நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சரியான முறையில் மருந்துப் பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்தால், மருந்துகளில் குறிப்பிடப்பட்டிருப்பதனைப் போன்று ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மருந்துப் பொருட்களைப் பயன்படுத்த முடியும்.விண்வெளியில் மருந்துப் பொருட்களின் திறன் தொடர்பில் ஆய்வு நடத்தும் நோக்கில் 35 மருந்துப் பொருட்கள் அடங்கிய நான்கு பைகள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பூமியில் களஞ்சியப்படுத்துவதனைப் போன்றே விண் கலத்திலும் பாதுகாப்பான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டு 28 மாதங்களின் பின்னர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. எனினும், குறித்த மருந்துப் பொருட்களை சோதனை செய்த போது அமெரிக்காவில் மருந்துப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தர நிர்ணயங்களை இந்த மருந்துப் பொருட்கள் இழந்திருந்தன.
திண்ம மருந்துப் பொருட்களில் மூன்றில் ஒரு பகுதி மருந்துப் பொருட்களை மட்டுமே பாவிக்கக் கூடியதாக இருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது. விண்வெளிப் பயணங்களின் போது மருந்துப் பொருட்கள் விசேடமான முறையில் பொதியிடப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. உற்பத்தியாளர்களின் பொதிகளிலேயே மருந்துப் பொருட்களை வைத்திருக்க முடியாது எனவும் கதிரியக்கத் தாக்கம் உள்ளிட்ட பல தாக்கங்களினால் மருந்துப் பொருட்கள் பழுதடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழில் -குளோபல் தமிழ்ச் செய்திகள்