SLILG, UNDP நிறுவனங்களின் அனுசரணையுடன் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை
கிறீன் கிறாஸ் ஹொட்டேல் – யாழ்ப்பாணம்
11.05.2018 காலை 09.00 மணியளவில்
பிரதம அதிதி உரை…
இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே, ஒரு நாள் பயிற்சிப் பட்டறை நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக வருகைதந்திருக்கின்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே, விசேட விரிவுரையாளர்களே, உள்ளூராட்சி ஆணையாளர் அவர்களே, இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கொழும்பில் இருந்துவருகைதந்திருக்கும் திரு.ஜயதிஸ்ச அவர்களே, பிரதேசசபைகளின் தவிசாளர்களே, ஏனைய உறுப்பினர்களே!
இன்றைய தினம் உள்ளுராட்சி மன்றங்களுக்கு புதிதாக தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாகிய உங்கள் அனைவரையும் ஒன்றுசேர சந்தித்து அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் முதற்கண் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன். கடந்த 04 வருடங்களாக மக்கள் பிரதிநிதிகள் இன்றி செயலாளர்களாலும் விசேட ஆணையாளர்களினாலும் பிரதேசசபைகள் மற்றும் மாநகரசபை ஆகியன நிர்வகிக்கப்பட்டுவந்தன. தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாகிய நீங்கள் தற்போது கடமைகளைப் பொறுப்பேற்றிருக்கின்றீர்கள். பலவித தகைமைகளை நீங்கள் கொண்டிருந்தால்த்தான் மக்களால் உங்களுக்கு வழங்கப்பட்ட ஆணைகளையும் மக்கள் முன் நீங்கள் அளித்த வாக்குறுதிகளையும் சிறப்பாக முன்னெடுக்க முடியும் என்பது நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. உங்கள்கடமைகளைமுன்னெடுப்பதற்கு முன்பதாக ஒரு பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கான கடமைகள் மற்றும் சேவை வரம்பு எல்லைகள் பற்றி நீங்கள் முதலில் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இவை பற்றிய விசேட விளக்கங்களையும் அறிவுறுத்தல்களையும் உங்களுக்கு வழங்குவதற்காகவே இன்றைய தினம் இந்த ஒரு நாள் கருத்தரங்கு உள்ளுராட்சி ஆணையாளர் அவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
உங்களில் பலர் உள்ளூராட்சி மன்றங்கள் பற்றிய போதுமான அறிவை ஏற்கனவே பெற்று இருக்கின்றீர்கள். சிலர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய அங்கத்தவர்களாக இப்பொழுதுதான் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றீர்கள். ஆனால் பிரதேசசபை உறுப்பினர்களாக இருந்தால் என்ன யாழ்ப்பாணம் மாநகரசபை உறுப்பினர்களாக இருந்தால் என்ன நீங்கள் யாவரும் பல்வேறு அரசியல் கட்சிகளின் அனுசரணையுடன் தேர்தலில் போட்டியிட்டு அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள்.
அண்மைய தேர்தலின் பின்னர் ஒவ்வொரு சபையும் ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகளின் ஒத்திசைவுடனேயே ஆட்சியை அமைத்திருக்கின்றன. இதை ஒரு குறைபாடாக எடுக்கத்தேவையில்லை. சபை நடவடிக்கைகளில் அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி இன மத பேதமின்றி உயர்வு தாழ்வு வேற்றுமையின்றி ஒரே குடும்ப அங்கத்தவர்களாகச் செயற்பட்டு உங்கள் உங்கள் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கான அதிஉச்ச முயற்சிகளில் ஈடுபடுவீர்கள் என்றே நாம் உங்களிடம் எதிர்பார்க்கின்றோம்.
உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாநகரசபை ஆகியன மக்களுக்கு வழங்கக்கூடிய சேவைகளில் சுமார் 80% மான சேவைகளை தற்போதும் வழங்கி வருகின்றன என்பதனை எம்மில் பலர் எண்ணிப் பார்ப்பதில்லை. அச் சேவைகளைச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
எவ்வாறான மனோநிலையில் இருந்து நாம் சேவையாற்ற வேண்டும் என்பதே நாம் தெரிந்து கொள்ளவேண்டிய முதல் விடயம். நாங்கள் மக்களின் மேய்ப்பர்கள் என்ற நிலையில் இருந்து செயற்படாது பொது மக்களுக்கான சேவகர்களாக எம்மை ஆக்கிக் கொண்டு உரிய சேவைகளை வழங்குவதற்கு நாம் முன்வர வேண்டும். விழுந்து விழுந்து வாக்குக் கேட்கும் நாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் எமக்கு வாக்களித்த மக்களை மறந்து விடுகின்றோம். அந்த நிலையும் நினைப்பும் உங்களைப் பீடிக்காது பார்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்துஒரு பொது மகன் தான் பெற்றுக் கொள்ள வேண்டிய சேவை கருதி ஒரு பிரதேசசபைக்கோ அல்லது மாநகரசபைக்கோ வருகைதருமிடத்து ஒரு தடவையிலேயே அவரின் சேவைகளை வழங்க நீங்கள் ஆவன செய்ய வேண்டும். திரும்பத் திரும்ப சாதாரணப் பொதுமக்களை சபைகள் நோக்கி வரச்செய்வது தவிர்க்கப்பட வேண்டும்;. பலருக்கு பஸ் கட்டணத்தைச் சேமித்தால் அவர்களுக்கு ஒரு நேர உணவாகும். மக்களை திரும்பத்திரும்ப வரச் செய்வது ஊழலுக்கும் ஒத்திப்போடும் மனோநிலைக்கும் அஸ்திவாரம் அமைக்கின்றது. பொது மக்கள் உங்களது சபையை ஒரு முன்மாதிரியான சபை என எடுத்துக்கூறக்கூடிய வகையில் நீங்கள் ஒவ்வொருவரும் செயற்படுவீர்கள் என எதிர்பார்;க்கின்றோம்.
மூன்றாவதாக நான் உங்களுக்குக் கூற வருவதுபிரசேசபைகளில் தவிசாளருக்கும் செயலாளருக்கும் இடையே நிலவ வேண்டிய உறவு பற்றியது. அவர்களின் உறவு ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்ததாக அமைய வேண்டும். அதாவது ஒவ்வொருவரும் மற்றவரை அனுசரித்து நடக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.அதாவது ஒவ்வொரு பிரதேச சபையினதும் நிறைவேற்று அதிகாரியாக அச்சபையின் தவிசாளர் அவர்களே விளங்குகின்றார். தவிசாளர் அவர்களினாலும்,சபையின் ஒத்திசைவுடனும் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களை நடைமுறைப்படுத்துகின்ற பொறுப்பு அச்சபையின் செயலாளரினதும் அவரது உத்தியோகத்தர்களினதும் கடமையாகும். ஆகவே செயலாளர்கள் தீர்மானங்களைத் தாம் முன்னெடுக்க அவசரப்படல் ஆகாது. தீர்மானங்கள் மக்கள் பிரதிநிதிகளால் எடுக்கப்படல் வேண்டும். அதே போல தவிசாளர்கள் செயலாளர்களால் முன்னெடுக்கப்படவேண்டியகடமைகளில் தாங்கள் குறுக்கீடு செய்வது ஒரு சுமூகமான நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு தடைக்கற்களாக அமைவன. ஆகவே அவரவர் கடமைகளை அவரவர்களே பார்த்து வர நாம் அனுசரணை வழங்க வேண்டும்.
சபை இரண்டுபடுகின்ற போது உறுப்பினர்கள் சிலர் செயலாளர்களுடன் இணைந்து கொண்டு அல்லது செயலாளர்களை அணுகாது நேரடியாக சில உத்தியோகத்தர்களின் உதவிகளோடு குறிப்பிட்ட சில வேலைகளை நிறைவேற்ற முயல்வதை நாம் கண்ணுற்றுள்ளோம். இவ்வாறான செயல்கள்சபை உறுப்பினர்களின் கௌரவத்தை குறைப்பதுடன் ஊழியர்களுக்கிடையேயும் வேற்றுமையை உருவாக்க இடமளிக்கின்றது. இந்த நிலை தவிர்க்கப்பட வேண்டும்.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு சபையும் அதன் முழு சேவைக்காலமான 4 வருடங்களையும் திறம்பட மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்க முன்வரவேண்டும். போரின் பின்னரான எம் மாகாண மக்களின் தேவைகள் மலைபோல் குவிந்து காணப்படுகின்றன.அவற்றில் பல தேவைகள் உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக நிறைவேற்றப்படக்கூடியவை. முக்கியமாக குடிதண்ணீர்ப் பிரச்சனை.
வடபகுதியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு புகை வண்டிகள் மூலமாக குடிதண்ணீர் அனுப்பி வைத்த காலம் போய் இன்று தண்ணீர் வழங்கிய சுன்னாகம் பகுதிக்கே குடிதண்ணீர் வழங்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது. எனவே பொது மக்களுக்கான குடிதண்ணீர் விநியோகம் தங்குதடையின்றி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படல் வேண்டும். பொறுப்புக்களை தட்டிக்கழிப்பதும் இன்னொருவரின் தலையில் இவ்வாறான பொறுப்புக்களை சுமத்திவிடுவதும் மன வேதனைக்குரியது.
ஒரு அலுவலகத்தின் வாகனத்தரிப்பிடத்தில் இரண்டு தண்ணீர் பவுசர்கள் தேடுவாரற்று நிறுத்தப்பட்டுக் கிடந்தன.விசாரித்ததில் சிறு சிறு குறைபாடுகளுடன் அவை ஓடமாட்டாமல் இருப்பதாகக் கூறப்பட்டது. சுமார் 10 – 20 ஆயிரம் ரூபா செலவுடன் நிவர்த்தி செய்யப்படக்கூடிய திருத்த வேலைகளை அல்லது பற்றரி மாற்றங்களைச் செய்யாது அவை கிடப்பில் இருப்பதாக அறிந்தேன். ஆனால்ஆராய்ந்து பார்த்ததில் உண்மை என்னவென்றால் இந்த வாகனங்களைத் திருத்துவதென்பது மிகச்சிறிய விடயம்; ஆனால் இவற்றைத் திருத்தினால் சேவைகளை வழங்க வேண்டுமேஎன்ற கபட நோக்கில் இவற்றைத் திருத்தாது வைத்திருப்பது தெரியவந்தது. இவ்வாறான காரியங்களை நாங்கள் தவிர்க்க வேண்டும். எம்மிடம் இருக்கும் சகல வளங்களையும் பாவித்து மக்கள் பயனடைவதையே நாம் எமது குறிக்கோளாக வைத்திருக்க வேண்டும். ஊதாரித்தனமான செலவுகளையும் வீண் செலவுகளையும் தவிர்க்க வேண்டும்.
பற்பல சேவைகளை ஆற்றக்கூடிய வசதி வாய்ப்புக்களும் ஆளணிகளும் எம்மிடையே உள்ள போதும் அவற்றை முறையாக நாம் பயன்படுத்துவதில்லை. பற்பல பிரதேசசபைகளில் மோட்டார் கிறேடர்களும், ஜே.சி.பி இயந்திரங்களும் தண்ணீர் பவுசர்களும் நிரம்பிக்கிடக்கின்றன. ஆனால் அவற்றை பயன்படுத்தக்கூடிய அல்லது அவற்றின் பயன்பாட்டை மீள்குடியேறிய மக்களுக்கு வழங்கக்கூடிய வசதிகள் இருக்கின்ற போதும் அச் சேவைகளைவழங்குவதற்கு சபைகள் பின்னடிப்பு செய்து வருவது வருத்தத்திற்குரியது. புதிதாக வேலை ஏற்கும் நீங்கள் இவ்வாறான பின்னடிப்புக்களைக் கண்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சில சேவைகள் வழங்கப்படும் போது ஏற்படக்கூடிய செலவீனங்களை சபை பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அப்பொறுப்பின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கஒவ்வொரு தவிசாளரும், மாநகர முதல்வரும் தமக்குரிய கடமைகளையும் அதிகார வரம்புகளையும் நன்கு தெரிந்து வைத்திருத்தல் அவசியம். அவர்களுக்கான கடமை அதிகார வரம்புகளை எடுத்துக்கூறக்கூடிய விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.ஒவ்வொரு பிரதேச சபையினது தவிசாளருக்கும் மாநகரசபையினதுமுதல்வருக்குமான அதிகார வரம்புகள் தனித்தனியாக இவ்வர்த்தமானி அறிவித்தல்கள் மூலமாக அறியத்தரப்பட்டுள்ளன.அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் 554ஃ5 – 1989ம் ஆண்டு ஏப்ரல் 17ம் திகதியது. வர்த்தமானி இல. 1952ஃ15 – 02.02.2016 திகதியது. இவற்றுடன் மாநகரக் கட்டளைச் சட்டம் அத்தியாயம் 170 ஆகியனஅறியத்தரப்பட்டுள்ளன. இவற்றைநீங்கள் பிரதிபண்ணிஉங்கள் கையேடுகளாகவேபயன்படுத்தவேண்டும்.
இரண்டு முக்கியகுணாதிசயங்களை நாங்கள் எங்கள் அரசியல் வாழ்க்கையில் பிரதிபலிக்;க வேண்டும். அவைமுறையேவெளிப்படைத் தன்மை (Transparency) மற்றும் பொறுப்புக் கூறல் (Accountability) என்பனவாகும். வெளிப்படைத்தன்மை கரவான மோசடிகளில் நாம் ஈடுபட இடமளிக்காது. பொறுப்புக் கூறல் என்பதுஎல்லாஅரசியல் வாதிகளினதும் அலுவலர்களினதுங் கடமையாகும். அதனைச் செவ்வனேசெய்யயாவரும் முன்வரவேண்டும். இவற்றைஅனுசரித்துநீங்கள் நடந்துஉங்கள் பதவிக்காலத்தைமக்கள் துயர்துடைக்கும் ஒருசிறந்தகாலப்பகுதியாகமாற்றமுன்வாருங்கள்.
இன்றையஅறிமுகநிகழ்வில் நான் நீண்டஉரையாற்றுவது இங்கு நடைபெறவிருக்கின்ற பயிற்சிப்பட்டறைக்குஒரு இடையூறாக அமைந்துவிடக்கூடும். எனவே எனது ஆரம்பஉரையை இந்தளவில் நிறைவுசெய்துகொண்டுஉங்கள் ஒவ்வொரு பிரதேசசபையும் முன்மாதிரியான சபைகளாக விளங்க வாழ்த்தி எனது உரையை நிறைவு செய்கின்றேன்.
நன்றி
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்