அரசியல் தலையீடு காரணம் என்கின்றார் விவசாய அமைச்சர் சிவநேசன்….
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
வன்னேரிக்குளம் நெல் காய்தளம் மீண்டும் திரும்பிச்செல்கிறது. அரசியல் தலையீடு காரணம் என்கின்றார் விவசாய அமைச்சர் சிவநேசன்.
வன்னேரிக்குளம் பிரதேசத்திற்கான நெல் காய்தளம் மீண்டும் திரும்பிச்செல்கிறது. இம்முறை அரசியல் தலையீடு காரணமாகவே அமைக்கப்படாது திரும்புகிறது என வடக்கு மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது
கிளிநொச்சி வன்னேரிக்குளம் கிராமத்திற்கு வடக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மூலம் நெல் காய்தளம் அமைப்பதற்கு 2017 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டது, அப்போது தளம் அமைப்பதற்கான பொருத்தமான நிலம் இன்மையால் நெல் காய்தளம் அமைக்காமல் திரும்பிச்சென்றது.
இதனை தொடர்ந்து நெல் காய்தளம் அமைப்பதற்கு பிரதேச கமக்கார அமைப்பான குஞ்சுக்குளம் கமக்கார அமைப்பு கோரிக்கை விடுத்து கமக்கார அமைப்பின் தலைவர் தனது சொந்த காணியின் ஒரு பரப்பை உரிய முறைப்படி பொதுத் தேவைக்கு வழங்கியிருந்தார். இதுவும் கடந்த வருடம் இடம்பெற்றது.
இந்த நிலையில் மீண்டும் இவ்வருடம் நிதி ஒதுக்கப்பட்டு குறித்த காணியில் நெல் காய்தளம் அமைப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு கல், மணல் இறக்கப்பட்டு அத்திபாரம் வெட்டிய நிலையில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலையீடு காரணமாகவும் அவர் விவசாய திணைக்கள அதிகாரிகைள தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டமையினாலும் குறித்த நெல் காய்தளம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த நெல் காய்தளம் அமைக்கும் பணி இரண்டாவது தடவையாக உரிய முறைப்படி மேற்கொள்ளப்பட்டது இருந்தும் காணியை இதற்காக வழங்கிய நபர் தனக்கெதிரான அரசியல் தரப்பைச் சார்ந்தவர் என்ற காரணத்தினால் மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலையீட்டு பணிகளுக்கு இடையூறு விளைவித்ததன் காரணமாக இரண்டாவது தடவையாகவும் வன்னேரிக்குளத்திற்கான நெல் காய்தளம் அமைக்கும் பணி திரும்பிச்செல்கிறது. எனத் தெரிவிதார்.
இது தொடர்பில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு வினவிய போது அவர்களும் அமைச்சரின் கருத்தை உறுதிப்படுத்தியதோடு, குறித்த தளம் தற்போது பூநகரி அல்லது புளியம்பொக்கனை பிரதேசங்களுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகிறது எனவும் தெரிவித்தனர்.
கிராமத்திற்கு வந்த திட்டத்தை அரசியல் காரணங்களுக்காக மக்களின் நலனை கருத்தில் எடுக்காது திருப்பியமை பிரதேச கமக்காரர்கள் மத்தியில் கவலையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.