குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் 7 நாட்கள் உத்தியோபூர்வ சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு நாளை (13.05.18) இலங்கை செல்லவுள்ளார். இலங்கை செல்லும் இந்திய இராணுவ தளபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட முப்படைகளின் தளபதிகளை சந்திக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து திருகோணமலை மற்றும் தியதலாவ பாதுகாப்பு தளங்களுக்கும் செல்ல உள்ள இந்திய இராணுவ தளபதியின் இலங்கை பயணம் தெற்காசிய வலயத்தின் பாதுகாப்பு துறைசார் தந்திரோபாயத்தின் முக்கிய விடயமாக நோக்கப்படுகிறது.
பட்டுப்பாதை திட்டத்தின் ஊடாக தெற்காசிய நாடுகளில் தனது பொருளாதார ஆதிக்கத்தை வலுப்படுத்தி வரும் சீனா, இலங்கையின் தெற்கு கடல் பரப்பின் ஊடாக தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்தி வருகின்றது. பூகோள பொருளாதார நிலைமைகளை முன்னேற்றுவதற்கான வாய்ப்பாகவும் பட்டுப்பாதை திட்டம் காணப்படுவதாகவும் தெற்காசியாவில், இலங்கையூடான பட்டுப்பாதைத் திட்டத்தின் ஊடாக சிறந்த பலன்களை அடையும் என சீனா கூறியுள்ளது.
சீனா இலங்கையுடனான தனது உறவுகளை பாரியளவில் விருத்தியடைய செய்துள்ளது. இதன் ஒரு அங்கமாக இராணுவ ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வுகளிலும் அதிகமான பரிமாற்றம் போன்ற பல விடயங்களில் இரு தரப்பு இராணுவத்திற்கிடையில் வலுவான உறவுகளை இலங்கையுடன் கட்டியெழுப்பும் செயற்பாடுகளையும் விரிவுப்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் சீனாவின் இவ்வாறான செயற்பாடுகள் தெற்காசியவில் கடும் ஆதிக்கத்திற்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்றதொரு சூழலில் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத்தின் இலங்கை பயணம் முக்கியமானதாக கருதப்படுகிறது.